2025-26ம் கல்வி ஆண்டுக்கான ஆர்டிஇ சேர்க்கை; தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
சென்னை: 2025-26ம் கல்வி ஆண்டுக்கான ஆர்டிஇ சேர்க்கைக்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கட்டாய கல்வி உரிமைச் சட்டம், 2009 பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் இலவச கல்வியை உறுதி செய்கிறது. கடந்த ஆண்டு, ஏப்ரல் 1 அன்று அறிவிப்பு வெளியாகி, ஏப்ரல் 20 முதல் சேர்க்கை தொடங்கியது. ஆனால், இந்த ஆண்டு மே மாதம் தொடங்கியும் அறிவிப்பு வெளியாகவில்லை. பள்ளிகள் ஜூன் 2 அன்று திறக்கப்படவுள்ள நிலையில், இந்தத் தாமதம் சேர்க்கை செயல்முறையை பாதிக்கும்.
2025-26 கல்வி ஆண்டுக்கான ஆர்டிஇ விண்ணப்ப அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும். மேலும், இணையதளத்தில் விண்ணப்ப செயல்முறை, தேவையான ஆவணங்கள், காலக்கெடு உள்ளிட்ட விவரங்களைத் தெளிவாகப் புதுப்பிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


