Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டெல்லி குதைமி பள்ளிவாசலை அகற்றும் முயற்சி மதச்சார்பின்மையின் மீதான நேரடி தாக்குதல் - ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: டெல்லியில் கிருஷி பவன் வளாகத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான குதைமி பள்ளிவாசலை அகற்றப்போவதாக ஒன்றிய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கண்டான் அறிக்கையில் அவர் கூறி உள்ளதாவது;

மத்திய விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தின் பெயரால் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வழிபாட்டுத் தலத்தை அகற்றத் துடிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை, மதச்சார்பின்மை மற்றும் மத உரிமைகள் குறித்த அதன் உண்மையான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

1940ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பள்ளிவாசல் நிர்வாகக் குழுவிற்கு வழிபாட்டிற்காக அனுமதி வழங்கப்பட்டது. இந்தியா விடுதலைப் பெற்ற பிறகும் பல பத்தாண்டுகளாக ஒன்றிய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் இப்பள்ளிவாசலில் தொழுகை நடத்தி வருகின்றனர். இவ்வாறு நீண்டகாலமாக வழிபாட்டில் இருந்து வரும் பள்ளிவாசலை, அரசு நிலத்தில் அமைந்துள்ளது என்ற ஒரே காரணத்திற்காக அகற்றுவது எவ்வகையிலும் நியாயமற்றது. அரசு அலுவலக வளாகத்தில் நிரந்தர வழிபாட்டுத் தலம் இருப்பது மதச்சார்பற்ற தன்மைக்கு முரணானது என்று ஒன்றிய அரசு கூறுவது அதன் மதச்சார்பின்மை குறித்த தவறான புரிதலை வெளிப்படுத்துகிறது.

மதச்சார்பின்மை என்பது மத வழிபாட்டுத் தலங்களை அகற்றுவதோ, மத நம்பிக்கைகளைப் பொது வெளியில் இருந்து ஒதுக்குவதோ அல்ல. அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்குவதும், ஒவ்வொரு குடிமகனின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாப்பதுமே அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மையாகும். இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு பள்ளிவாசல் இருப்பதாகக் கூறி இந்தப் பள்ளிவாசலை அகற்றுவதற்கு நியாயம் கற்பிப்பதும் ஏற்க முடியாதது. ஒரு வழிபாட்டுத் தலம் இருப்பதால் மற்றொரு வழிபாட்டுத் தலத்தின் வரலாற்று உரிமையும் வழிபாட்டு மரபும் இல்லாமல் போய்விடாது.

இந்த வழக்கை விசாரிக்கும் டெல்லி உயர் நீதிமன்றம், அரசு வளாகங்களில் வழிபாட்டுத் தலங்களைத் தடைசெய்யும் விதிகள் என்ன என்றும், மாற்று வழிபாட்டிடங்களை வழங்குவதற்கான நடைமுறைகள் என்ன என்றும் ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சித் திட்டங்கள் மக்களின் வரலாற்றையும் மத உரிமைகளையும் அழிப்பதற்கான கருவிகளாக மாறிவிடக் கூடாது. எனவே, ஒன்றிய அரசு தனது முடிவைக் கைவிட்டு, குதைமி பள்ளிவாசலை அதே இடத்தில் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். அது சாத்தியமற்றது என்று நிரூபிக்கப்பட்டால், பள்ளிவாசல் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுடன் அருகிலேயே போதிய வசதிகளைக் கொண்ட மாற்று வழிபாட்டிடத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.