Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முதல்ல புழல்; இப்போ தேனி தேக்கம்பட்டி!! வெட்ட வெளிச்சத்திற்கு வந்த "தவெக அரசின் கையாலாகாத்தனம்"

சென்னை: தேனி மாவட்டம், தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தவெக அரசின் கையாலாகாத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

இது தொடர்பான அறிக்கை ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது; 'தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் தொடர்வது, மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

தேனி மாவட்டம், தேக்கம்பட்டி மாவட்டச் சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 சிறைக் கைதிகள் தப்பியோடியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு புழல் சிறையிலிருந்து இரு கைதிகள் தப்பியோடிய நிலையில், அச்சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தவெக அரசின் சட்டத் துறை மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர், அத்துறைகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் சரிசெய்வதில் கவனம் செலுத்தாமல், தனது விளம்பர மோகத்திற்காகவும் தனது இருப்பைக் காட்டிக்கொள்வதற்காகவும் செலுத்தும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது தனது துறைகளின் செயல்பாடுகளில் காட்டியிருந்தால், தொடர் மின்வெட்டு முதல் கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் வரை பல்வேறு பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியும்.

ஏற்கெனவே, தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், சிறையிலிருந்து ஒரே நேரத்தில் 17 கைதிகள் தப்பியோடியிருப்பது மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் பதற்றத்தையும் மேலும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் சிறை நிர்வாகத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முழுமையாக சீர்கெட்டுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதாகக் கூறி, புழல் சிறையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது அவரது ஆய்வின் நோக்கம் குறித்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. உண்மையிலேயே சிறை நிர்வாகத்தின் குறைபாடுகளைக் கண்டறிந்து களைவதற்காக ஆய்வு மேற்கொண்டாரா? அல்லது சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போல, ஜோதிடரின் அறிவுரைப்படி பரிகாரம் செய்வதற்காகச் சென்றாரா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

சிறைக் காவலர்களையே தாக்கிவிட்டுக் கைதிகள் தப்பியோடும் அளவிற்குப் பாதுகாப்புக் குறைபாடுகள் நிலவுவது, தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், கண்காணிப்பில் நிலவும் அலட்சியத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள இச்சூழலில், தப்பியோடிய கைதிகளால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்பாக அவர்களை விரைந்து கண்டறிந்து கைது செய்வதோடு, மாநிலத்திலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.