Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கூட்டணியில் இருந்து கொண்டே மோடி கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் புதுவை முதல்வர்: பாஜ அரசு மீது அதிருப்தி

புதுச்சேரி: பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை புதுவை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார். கூட்டணியில் இருந்து கொண்டே டெல்லியில் நடைபெறும் கூட்டங்களை தொடர்ச்சியாக அவர் புறக்கணித்து வருவதால் பாஜ அரசு மீது அவர் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டெல்லியில் பாரத் மண்டபத்தில் நேற்று நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான மாநில முதல்வர்கள் பங்கேற்று, தங்கள் மாநிலத்தின் தேவைகள் குறித்து பேசியுள்ளனர். அதே நேரத்தில், தேஜ கூட்டணி அரசு நடந்து வரும் புதுச்சேரி மாநிலத்தின் முதல்வர் ரங்கசாமி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

இது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், ரங்கசாமி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்திருப்பது, பாஜ மீதான அதிருப்தியை வெளிப்படுத்தவே என கூறப்படுகிறது. நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? என ரங்கசாமி மக்களிடம் விளக்க வேண்டும். மேலும் பிரதமர் மோடி மீது ரங்கசாமி நம்பிக்கை இழந்துவிட்டாரா? என்று தெளிவுபடுத்த வேண்டுமென எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே தேஜ கூட்டணி அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், வரும் தேர்தலில் பாஜவுடனான கூட்டணி தொடருமா? இல்லையா? என்பதை ரங்கசாமி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மேலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்ற மனக்கணக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூழலில் பிரதமரை சந்திக்க விரும்பவில்லையென்றும், மேலும் புதுச்சேரிக்கு கூடுதல் நிதி கேட்டு பலமுறை கடிதம் எழுதியும், மாநில அந்தஸ்து தொடர்பான தீர்மானத்துக்கு பாஜ உரிய பதிலை தராமல், தற்போதைய நிலையே தொடரும் என்ற பதிலும், உரிய நிதி பகிர்வை அளிக்காமல் புறக்கணிப்பதும் ஒன்றிய பாஜ அரசு மீது முதல்வருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எத்தனையோ முறை கேட்டும் கிடைக்காதது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று கேட்டால் உடனே கிடைத்துவிடுமா? என ரங்கசாமி நினைப்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என என்.ஆர் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 4 ஆண்டுகளில் நிதி ஆயோக்கின் ஒரு கூட்டத்தில் கூட ரங்கசாமி பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.