கலையரசன் கைது சகித்துக் கொள்ள முடியாதது; தமிழகத்தில் காவல்துறை ராஜ்யம் நடக்கிறதோ.!! பெ.சண்முகம் கடும் கண்டனம்...
சென்னை: சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) உதவிப் பேராசிரியரும், பொருளாதார அறிஞருமான முனைவர் கலையரசன், போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடர்பான புகாரில் சென்னை காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
நேற்று அதிகாலையில் சென்னை அடையாறில் உள்ள பேராசிரியர் கலையரசனின் வீட்டிற்கு சீருடை அணியாத காவல்துறையினர் வந்து, அவரை ஒரு வாடகை காரில் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அந்த வகையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "சென்னை வளர்ச்சி மையம் MIDS பேரா.கலையரசன் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து எவ்வித முகாந்திரமும் இல்லாமல் சீருடை அணியாத காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது வன்மையான கண்டனத்திற்குரியது. நள்ளிரவு கைது, அதிகாலை கைது என்பதெல்லாம் தமிழ்நாட்டில் காவல்துறை ராஜ்யம் நடக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
புகார் இருந்தால் முறையாக வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பி விசாரித்து இருக்கலாம். பிரபலமான பேராசிரியரை இப்படி நடத்தி இருப்பது சகித்துக் கொள்ள முடியாதது என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


