Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எங்க அம்மா மீது ஒரு துரும்பு கூட பட விடமாட்டேன் இந்த பழியை மட்டும் தாங்க முடியவில்லை: நேற்றுதான் எனக்கு விடுதலை கிடைத்தது: நிர்வாகிகள் கூட்டத்தில் அன்புமணி பேச்சு

சென்னை சோழிங்கநல்லூரில் நேற்று கட்சி நிர்வாகிகளை அன்புமணி சந்தித்தார். காலையில் 5 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த நிலையில் மாலையில் 6 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து அன்புமணி நிர்வாகிகளிடம் பேசியதாவது: இதுவரை எனக்கான சூழல் வரவில்லை. புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன். கட்சியில் சில குழப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தற்காலிக குழப்பம்தான்.

எல்லாமே சரியாகிவிடும். சரிப்படுத்திடுவிடுவோம். சரிப்படுத்திவிடுவேன். பொருளாளர் திலகபாமாவுக்கு எதிராக ஒரு கடிதம் வந்தது. அதற்கு எதிராக நான் திலகபாமா பொருளாளராக தொடருவார் என கடிதம் வெளியிட்டேன். அவரை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. பொதுக்குழுவிற்குதான் அதிகாரம் உள்ளது. நாங்கள் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்கள். பொதுக்குழு நினைத்தால்தான் நீக்க முடியும். இதுதான் கட்சியின் விதி. உடனடி இலக்கு, நம் கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற வேண்டும். வெற்றிபெறும். அடுத்தக்கட்டம் நம்முடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும். மாற்றம், முன்னேற்றம், அன்புமணி. ஒரு வருடம் இந்த பிரசாரத்தை செய்தோம்.

இந்தியா முழுவதும் சென்றடைந்தது. பிரசாரம் வெற்றி பெற்றது. நாம் வெற்றி பெற முடியவில்லை. அப்போது கலைஞர் ஒருபக்கம், ஜெயலலிதா அம்மையார் ஒரு பக்கம் இருந்தார்கள். 2019ல் அந்த பிரசாரத்தை செய்திருந்தால் இன்று ஆளுங்கட்சியாக இருந்திருப்போம். ஆனால் பிரசாரம் செய்ய முடியாத சூழல். என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவோ சோதனைகளை சந்தித்து இருக்கிறேன்.

அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். அபாண்டமான பழிகளை சந்தித்து இருக்கிறேன். இவை வேகமாக முன்னேற வேண்டும் என்ற வைராக்கியத்தை கொடுத்திருக்கிறது. இதற்கு முன்னதாக யார் யாரோ பழி போட்டார்கள். அதையெல்லாம் எளிதாக தூசி தட்டுவதுபோல் தட்டிவிட்டு சென்றுவிடுவேன். ஆனால், உலகில் நான் அதிகமாக நேசிப்பது என்னுடைய அம்மாதான்.

அதேபோல் அவர் அதிகமாக நேசிப்பது என்னைதான். எங்க அம்மா மீது ஒரு துரும்பு கூட பட விடமாட்டேன். இந்த பழியை மட்டும் தாங்க முடியவில்லை. நான் எத்தனையோ பதவிகளை பார்த்துவிட்டேன் (கண்கலங்குகிறார்). என்னை தலைவனாக எண்ணவில்லை. தலைமை தொண்டனாகவே இருக்கிறேன். மனதில் நிறைய உள்ளன. ஆனால் பேச முடியவில்லை. என் கடிதம்தான் சொல்லும்.

நேற்றுதான் எனக்கு விடுதலை கிடைத்தது. இனி நாம் வேகமாக செல்லலாம். எந்தத் தடை வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறுவோம். பாமகவை அடுத்தக் கட்டத்துக்கு நாம் கொண்டு வருவோம். நமக்கு இருந்து தடைகள் நேற்று முதல் அகன்று விட்டன. இவ்வாறு அன்புமணி பேசினார்.