Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தேசிய ஜனநாயக கூட்டணியில் ராஜ்யசபா சீட் கொடுக்க மறுப்பு மாநில அரசியலுக்கு திரும்பும் அன்புமணி: பாஜ சூழ்ச்சிக்கு ராமதாஸ் போடும் புதிய திட்டம்

விழுப்புரம்: தேசிய ஜனநாயக கூட்டணியில் ராஜ்யசபா சீட் கொடுக்க மறுப்பதால் அன்புமணியை மாநில அரசியலுக்கு திரும்ப ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜ போடும் சூழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் விதமாக அன்புமணியை வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வைக்க ராமதாஸ் முடிவு செய்து உள்ளார். பாமகவில் மாநில இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தனை நியமித்த விவகாரத்தில் அக்கட்சியின் நிறுவனரான ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பூதாகரமானது.

இதையடுத்து ராமதாஸ் அடுத்தடுத்து நடத்திய கூட்டங்களில், கட்சி நிர்வாகிகளின் பெரும்பாலான ஆதரவு அன்புமணிக்கும், வன்னியர் சங்கத்தினர் அவரது பக்கமும் உள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சுமுக உடன்பாடுக்கு முடிவெடுத்த ராமதாஸ், அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியை வழங்க முடிவெடுத்தார். அத்துடன் வன்னியர் சங்கத்துக்கு பேரன் பரசுராமன் முகுந்தனை தலைவராக நியமிக்கவும் திட்டமிட்டார். இதற்காக மூத்த நிர்வாகிகள் உதவியுடன் அன்புமணியுடன் சமரசம் பேசி முடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை (வியாழன்) ராமதாஸ் அறிவிக்க வாய்ப்புள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கு வருகிற ஜூலை 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் 4 இடங்களை திமுக கைப்பற்றுவது உறுதியாகி உள்ள நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் 2 சீட் யாருக்கு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஒரு எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. அதிமுகவுக்கு 66 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால், தற்போது கூட்டணியில் உள்ள பாஜ அல்லது பாமக உதவியுடன்தான் இன்னொரு எம்பியை அதிமுக தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் பாஜவுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என்று ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

டெல்லி அரசியலுக்கு அன்புமணியை அனுப்பினால் பாஜவால் நெருக்கடி கொடுக்கப்படலாம் என்பதால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜ அல்லாத புதிய கூட்டணியில் பாமக இருக்க வேண்டும் என்று ராமதாஸ் முடிவு செய்து உள்ளார். இதனால் அந்த கூட்டணியில் மீண்டும் அன்புமணிக்கு மாநிலங்களவை சீட் கேட்க ராமதாஸ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுக, பாஜவும் பாமகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அன்புமணியை மாநில அரசியலில் தீவிர கவனம் செலுத்த ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

அதேவேளையில் தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அன்புமணியை களமிறக்குவதோடு, தமிழகம் முழுவதும் பாமக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் அவரை ஈடுபடுத்தவும் ராமதாஸ் விரும்புவதாக தெரிகிறது. இதுகுறித்தும் மூத்த நிர்வாகிகள் மூலம் அன்புமணிக்கு தகவல் தெரிவித்து விட்டதாகவும் அதற்கு அவர் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அன்புமணிக்கு தலைவர் பதவியை மீண்டும் ராமதாஸ் வழங்கியதும், தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து கட்சியின் நிறுவனரும், தந்தையுமான ராமதாஸை சந்தித்து வாழ்த்து பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் எழுந்துள்ளது.