அறிவுடைமையின் அருமை புரியாதவர்களின் ஆட்சியில் கல்வியாளர்கள் வஞ்சிக்கப்படுவர்.!! கனிமொழி எம்பி கண்டனம்
சென்னை: அறிவுடைமையின் அருமை புரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில் கலைஞர்களும் கல்வியாளர்களும் வஞ்சிக்கப்படுவார்கள் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தவெக அரசை கடுமையாக சாடி உள்ளார். பொருளாதார அறிஞரான கலையரசன் அவர்களை சட்டவிரோதமாக கைது செய்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் கனிமொழி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறி உள்ளதாவது, "பேராசிரியரும், பொருளாதார அறிஞருமான கலையரசன் அவர்களை நேற்று அதிகாலையில் பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி அராஜகமான முறையில் கைது செய்து, அலைக்கழித்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ள தவெக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குப் பிரச்சினை என இந்த அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை விமர்சிக்கும் எவர் ஒருவரும் காவல்துறையின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற மிரட்டலாகத்தான் இந்தக் கைது சம்பவம் இருக்கிறது.
"அறிவுடைமையின் அருமை புரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில் கலைஞர்களும் கல்வியாளர்களும் வஞ்சிக்கப்படுவார்கள். தவெக-வின் ஆட்சி அப்படியானதே!" என்று விமர்சித்துள்ளார்.


