மாஜி அமைச்சர் உதயகுமாருக்கு நெருக்கமான இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் திடீர் விலகல்: மதுரை அதிமுகவில் பரபரப்பு
திருமங்கலம்: மதுரை மேற்கு மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இருந்த ஆர்யா நேற்று அக்கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தினை சேர்ந்தவர் ஆர்யா. அதிமுகவில் கடந்த 2007 முதல் இருந்து வருகிறார். தற்போது மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக பணிபுரிந்து வந்தார். மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர் உதயகுமாருடன் நெருக்கமானவர் என்பதால், கடந்த 2020 மதுரை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு கட்சி பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் தனிப்பட்டகாரணங்கள் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அனைத்து பொறுப்புகளிலிருந்து, அதிமுகவிலிருந்து விலகிக் கொள்வதாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் நேற்று அனுப்பிவைத்துள்ளார். இதே போல் முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான உதயகுமாருக்கு தனது விலகல் கொடுத்து தகவல் தெரிவித்து விட்டதாக ஆரியா தெரிவித்தார். இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் கட்சியிலிருந்து விலகியது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


