மின்சாரத்துறை குளறுபடிகளை மறைக்க வேண்டுமென்றே கைதிகள் தப்பவிடப்பட்டனரா.!! அமைச்சர் மீது அப்பாவு சந்தேகம்
திருநெல்வேலி: தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பி ஓடினார்களா அல்லது தப்ப விட்டார்களா..? என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு சந்தேகம் எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி சென்ற சம்பவத்தில் அவர்களாக தப்பி ஓடினார்களா அல்லது வேண்டுமென்றே தப்ப விடப்பட்டார்களா என்ற சந்தேகம் எழுவதாக கூறினார்.
ஏனென்றால் மின்சாரத்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு குளறுபடிகளை மடைமாற்ற தான் இந்த சம்பவம் நடந்ததா என்ற சந்தேகம் இருக்கிறது. இந்த சந்தேகம் ஏன் வருகிறதென்றால் இரண்டு துறைக்கும் அமைச்சர் நிர்மல்குமார் தானே..? அதனால் தான் இந்த சந்தேகம் வலுக்கிறது என்றார். தொடர்ந்து பேசிய அப்பாவு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதும் அதானி, அம்பானி நிறுவனங்களுக்கு லாபம் ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் நடைபெறுகிறது. மின் துறையை அதானியிடம் ஒப்படைக்கும் வரை மின் துறை அமைச்சர் பதவியில் இருப்பார். அதுவரை சிறை கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்களும் தொடரும் என்று விமர்சித்துள்ளார்.
அமைச்சர்கள் அனைவரும் பணம் வாங்க ஆரம்பித்து விட்டனர்.. தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் ஆனந்தை கைது செய்யுமா இந்த தவெக அரசு என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. முதல்வர் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தினரின் தொடர்பில்தான் தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது. கேரள உள்துறை அமைச்சர் நேரடியாக தமிழக முதல்வரை சந்தித்து, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போதை பொருட்கள் வருவதை தடுக்க வலியுறுத்தியும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது என்றும் சாடியுள்ளார்.


