மகத்தான ஆதரவைப் பார்த்து வயிற்றெரிச்சல் மக்களின் உள்ளங்களிலிருந்து முதல்வர் பெயரை நீக்க முடியாது: எடப்பாடிக்கு திமுக பதிலடி
சென்னை: திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்பி தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: திராவிட மாடல் அரசின் இந்த முன்னெடுப்புகள் மக்களிடம் பெற்றுவரும் மகத்தான ஆதரவைப் பார்த்து வயிற்றெரிச்சலில் என்ன செய்வதென்று தெரியாமல் அற்ப வேலைகளில் இறங்கியிருக்கிறார் பழனிசாமி. நீதிமன்றத்தை நாடி இத்திட்டங்களில் தமிழ்நாடு முதல்வரின் பெயரை பயன்படுத்தக் கூடாது தடைவிதிக்க வேண்டும் என சின்ன புத்தியோடு அரசியல் செய்து கொண்டிருக்கிறது அதிமுக.
அதிமுக ஆட்சியில் அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மினி கிளினிக் என ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடியவர்கள் இன்று முதல்வரை பெயரைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். அதுமட்டுமில்லாமல் எந்த முன்னாள் முதல்வர்களின் படங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று கூறுவதன் மூலம் அண்ணாவிற்கும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தங்களுடைய தலைவர்களுக்கும் சேர்த்தே துரோகம் இழைத்துள்ளனர். தமிழ்நாடு முதல்வரின் பெயர் மக்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்குரலில் கலந்திருக்கிறது. அப்பெயரை தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களிலிருந்து ஒருபோதும் நீக்க முடியாது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
