Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அண்டி பிழைத்து சமீபத்தில் பணக்காரர்கள் ஆனார்கள் அண்ணாமலை, 28 கூட்டாளிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன்: மாஜி பாஜ நிர்வாகி திருச்சி சூர்யா சிவா பரபரப்பு பதிவு

திருச்சி: அண்ணாமலை, 28 கூட்டாளிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று மாஜி பாஜ நிர்வாகி திருச்சி சூர்யா சிவா வெளியிட்ட பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக பாஜவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் திருச்சி சூர்யா சிவா. இவருக்கும், தமிழக பாஜவின் சிறுபான்மை பிரிவுத் தலைவர் டெய்சிக்கும் இடையே நடந்த ஆபாச உரையாடல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, 6 மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு, தமிழக பாஜவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் மற்றும் சூர்யா சிவா பேசும் ஆடியோ வைரலானது. இதைத்தொடர்ந்து தமிழக பாஜ தலைமையை விமர்சித்த தமிழிசையை கடும் விமர்சனம் செய்திருந்தார் சூர்யா சிவா. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து மீண்டும் நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், சூர்யா சிவா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அண்ணாமலை பைல்ஸ்-1 வெளியிடப்படும் (இதில் நானே என் தனிப்பட்ட முயற்சியில் சேகரித்த தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட உள்ளேன்). ஊழலை ஒழிப்பேன் என்ற பெயரில், ஊழல் பேர்வழிகளிடம் மிரட்டி பணம் பறித்து சொத்து சேர்த்த விவரங்கள் மற்றும் அண்ணாமலையை அண்டி பிழைத்து சமீபத்தில் பணக்காரர்களான அவர்களது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் விவரங்கள் இந்த பைல்சில் கண்டிப்பாக இடம்பெறும்’ என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து திருச்சி சூர்யா சிவாவை தொடர்பு கொண்ட போது அவர் கூறியதாவது: அண்ணாமலை மற்றும் அவரது நிழல்களாக இருந்து அண்டி பிழைத்து சமீபத்தில் பணக்காரர்கள் ஆன 28 பேரின் ஊழல் சொத்து பட்டியலை நான் வௌியிடுவேன். கோவை விமான நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் ஊழல் குறித்து அண்ணாமலை பேசியிருந்தார். இதுதொடர்பான பல ஆவணங்கள் என்னிடம் உள்ளது.

டிரான்ஸ்பார்மர் ஊழலில் அண்ணாமலைக்கும் பங்குள்ளது. டிரான்ஸ்பார்மர்கள் ஒப்பந்தத்தில் 34 நிறுவனங்கள் உள்ளது. இதில் அண்ணாமலையின் அத்தை மகன் கோவையில் இரண்டு கம்பெனிகள் நடத்தி வருகிறார். அதேபோல் இவருடைய நிழல்களுக்கு சொந்தமாக உள்ள 12 நிறுவனங்கள் டிரான்ஸ்பார்மர் செய்யும் ஒப்பந்தத்தில் பங்கேற்கிறார்கள். ஆனால் இந்த 12 நிறுவனங்கள் தான் மற்ற நிறுவனங்களை ஒன்றிணைத்து அரசு நிர்ணயித்த விலையை விட 3 மடங்கு அதிக விலையை கூற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அண்ணாமலை நிர்பந்தத்தால், குறைந்தவிலைக்கு செய்ய வேண்டிய 250கிலோவாட், 500 கிலோவாட் டிரான்ஸ்பார்மர்களை 3 மடங்கு அதிகம் கொடுத்து செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டதற்கு காரணம் அண்ணாமலை தான், அப்படி இருக்கும் போது இவர் எப்படி செந்தில்பாலாஜியால் ஊழல் நடந்துள்ளது என்று கூறமுடியும். எனவே இந்த தகவல்கள் அனைத்தையும் நாளையோ, அதற்கு மறுநாளோ நான் ஒரு வீடியோ பதிவாகவே வெளியிட உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.