Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அயோத்தியில் செய்ததைப் போல குஜராத்திலும் பாஜவை வீழ்த்துவோம்: ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு

அகமதாபாத்: ‘அயோத்தியில் பாஜவை வீழ்த்தியது போல, குஜராத்திலும் நாங்கள் பாஜவை தோற்கடிப்போம்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசி உள்ளார்.குஜராத் சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அகமதாபாத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் நேற்று பேசியதாவது: குஜராத்தில் எங்கள் கட்சி அலுவலகத்தை பாஜ அடித்து சேதப்படுத்தி, எங்களை மிரட்டி சவால் விடுத்துள்ளது. எங்கள் அலுவலகத்தை நொறுக்கியது போல, நாங்கள் ஒன்றிணைந்து உங்கள் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அயோத்தியில் நாங்கள் செய்ததைப் போல குஜராத்திலும் வெற்றி பெறுவோம். குஜராத்தில் காங்கிரஸ் போட்டியிட்டு, மோடியையும், பாஜவையும் வீழ்த்திக் காட்டும்.

அயோத்தியில் பாஜவை வீழ்த்தி விட்டோம். அத்வானியின் ராமர் கோயில் இயக்கம் தான் அயோத்தியை முன்நிறுத்தியது. ஆனால் கோயில் திறப்புவிழாவில் அத்வானிக்கு பதில் அதானி, அம்பானி அழைக்கப்பட்டனர். உள்ளூர்மக்கள் அழைக்கப்படவில்லை. அங்கு மக்களவை தேர்தலில் பா.ஜவை இந்தியா கூட்டணி தோற்கடித்துள்ளது. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அதே போல, குஜராத்தில் மோடி மாடல் என ஊதிப் பெரிதாக்கப்பட்ட பலூனை காங்கிரஸ் உடைத்துக் காட்டும். இதற்கு குஜராத் மக்கள் பயப்பட வேண்டாம் என நீங்கள் (கட்சி நிர்வாகிகள்) சொல்ல வேண்டும். குஜராத் மக்கள் பயப்படாமல் எதிர்த்து போராடினால், அவர்கள் முன்பாக பாஜவால் நிற்கவே முடியாது.

அயோத்தியில் விமான நிலையம் கட்டுவதற்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரையிலும் உரிய இழப்பீடு தரப்படவில்லை என்ற தகவலை அயோத்தி எம்பி நாடாளுமன்றத்தில் என்னிடம் கூறினார். குருநானக், மகாவீரர், புத்தரின் புகைப்படங்களைப் பாருங்கள். இஸ்லாமில் கூட ஆசி வழங்குவதில் காங்கிரசின் கைச் சின்னம் உள்ளது. இதை சிவன் படத்திலும் பார்க்கலாம். எனவே யாரைப் பார்த்தும் நீங்கள் பயப்படாதீர்கள். இவ்வாறு கூறினார். சமீபத்தில் இந்துக்கள் பற்றி ராகுல் காந்தி பேசியதை கண்டித்து அகமதாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ தொண்டர்கள் காங்கிரஸ் நிர்வாகிகளை தாக்கி அவர்களின் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது குறிப்பிடத்தக்கது.