பேராசிரியர் கலையரசன் கைது கருத்துச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல்; எம். எச். ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை: பேராசிரியர் கலையரசன் போலீசாரால் அதிகாலை நேரத்தில் அத்துமீறி கைது செய்யப்பட்ட சம்பவம் கருத்துச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்று மமக. தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) பேராசிரியரான முனைவர் கலையரசன் அவர்கள், காவல்துறையினரால் அதிகாலையில் கைது செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சீருடை அணியாத காவலர்கள் அவரைக் கைது செய்து வாடகை வாகனத்தில் அழைத்துச் சென்றது கடும் கண்டனத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட மாடல் ஆட்சியின் பொருளாதாரச் சாதனைகள் குறித்து ஆய்வு செய்தவரும், அரசின் கொள்கைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் உரிமை கொண்டவருமான ஓர் அறிஞர், தனது விமர்சனக் கருத்துகளுக்காகக் குறிவைக்கப்பட்டிருப்பது கருத்துச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காத கருத்துகளை முன்வைப்பவர்களை அச்சுறுத்துவதன் மூலம் விமர்சனங்களை ஒடுக்கிவிடலாம் என்று எந்த அரசும் நினைக்கக் கூடாது என்றும் ஜவாஹிருல்லா சாடியுள்ளார்.
காவல்துறை என்பது ஆட்சியாளர்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றும் கருவி அல்ல; சட்டத்தையும் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அமைப்பு. கைது நடவடிக்கையில் சட்ட நடைமுறைகள் மீறப்பட்டிருந்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.


