Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசியல் நாகரிகம்

அரசியல் என்பது ஒரு ஆட்சியை அல்லது ஆட்சியாளர்களின் செயல்முறைகளை எதிர்க்கட்சிகள் நியாயமான முறையில் விமர்சனம் செய்யும் ஒரு களம் ஆகும். அது பொதுவெளியாக இருந்தாலும் சரி... சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் பொதுக்கூட்டங்கள், பேட்டிகள், தேர்தல் பிரசாரங்கள் என எதுவாக இருந்தாலும் சரி... விமர்சனத்தில் கண்ணியம் கலந்த நாகரிகத்தை கண்டிப்பான முறையில் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். எதிர் அரசியல் செய்யலாம். ஆனால், எதிரி போல பாவித்து, சாபம் விடுவது போல பேசுவது அரசியல் அவலத்தின் உச்சக்கட்டம். அது ஒரு முதிர்ச்சியற்ற நிலை என அரசியல் கட்சியினர், விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைப் பற்றி, எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியவை, திமுக தரப்பில் மட்டுமல்ல.. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடுநிலையான பொதுமக்கள் தரப்பிலும் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. அது விமர்சனம் என்பதையெல்லாம் தாண்டி, மனநிலை மாற்றமுள்ள ஒருவரின் தரம் தாழ்ந்த பேச்சாகவும் உள்ளதாக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக நிறுவனரும், பிரபல நடிகருமான எம்ஜிஆரைப் பற்றி ஒன்றை குறிப்பிட்டுச் சொல்வார்கள். எம்ஜிஆர் தீவிர அரசியலில் களமிறங்கியதும், ஒருமுறை அவருடன் காரில் பயணித்த ஒரு பிரபலம், கலைஞரைப் பற்றி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இதனால் எம்ஜிஆர் கோபம் அடைந்தார். திடீரென காரை நிறுத்தச் சொன்ன எம்ஜிஆர், கலைஞர் மூத்த அரசியல் தலைவர். அவரைப் பற்றி இப்படி விமர்சித்து பேசக்கூடாது என்று கூறி, அந்த பிரபலத்தை காரை விட்டு இறங்குமாறு கடிந்து கொண்டதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக கூறுவார்கள். அப்படிப்பட்டவரின் கட்சியில் பல ஆண்டுகள் பயணித்து முதல்வர், பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் போன்ற பதவி வகிக்கும் ஒருவர் இப்படி பேசலாமா என்றும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

பாஜவுடனான கூட்டணியால் தமிழகத்தில் அதிமுக தனது வாக்கு நிலையில் இருந்து படிப்படியாக கீழிறங்கி வருகிறது. மேலும், கடந்த 2021 தேர்தலில் தோல்வி அடைந்ததால், பாஜ கட்சியை அதிமுக மாஜி அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதனால் கூட்டணி உடைந்தது. தற்போது மிரட்டலுக்கு அஞ்சி பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை அக்கட்சியில் உள்ள பலரும், பொதுமக்களும் கூட விரும்பவில்லை. மேலும், எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு நடந்த எம்பி, எம்எல்ஏ, உள்ளாட்சி தேர்தல் முடிவுகளே இதற்கு சாட்சியென கூறலாம். திமுக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் விடியல் பயணத்திட்டம், மகளிர் உரிமைத்தொகை, மாணவர்கள், மாணவிகளுக்கான உதவித்தொகை உட்பட பல்வேறு திட்டங்கள் தமிழக மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ரூ.8 ஆயிரம் கூப்பனும், அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டு நின்று வரவேற்கின்றனர். கொரோனா வார்டுக்கு சென்றது உட்பட தமிழக மக்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக நேரில் வருகிற, குரல் கொடுக்கிற முதல்வரை விமர்சனம் என்ற பெயரில் தரம் தாழ்ந்து பேசுவதை அரசியல் களத்தில் இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது அரசியல் தலைவர்களின் கருத்து. எடப்பாடி இதற்கு செவி சாய்ப்பாரா?