தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பதை அடுத்து தற்போது அனைத்து மட்டத்திலும் அரசியல் களம் பரபரப்படைந்து வருகிறது. சற்றேறக்குறைய அந்தந்த கட்சிகள் தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விருப்பம் தெரிவிக்கும் பிற கட்சிகளுடன் தொகுதி உடன்பாடுகளை செய்து தங்கள் கட்சிகளை தயார் படுத்திக்கொள்ளும் நிலையில் உள்ளன. இருப்பினும், பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மீண்டும் தங்களை இந்த தேர்தல் களத்தில் நிலை நிறுத்திக் கொள்ள கடும் முயற்சிகளையும், முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றன.
இந்த தேர்தல் குறித்து இப்போதே வாக்காளர்களும் பேசத் தொடங்கிவிட்டனர். அதேபோல கட்சிகளில் உள்ள தொண்டர்களும், முக்கிய பிரதிநிதிகளும் அந்தந்த கட்சிகளின் செயல்பாடுகளை உற்று கவனித்து இது இப்படித்தான் இருக்கும். இப்படித் தான் நடக்கும். இப்படி செய்தால் நல்லது என்றும் பேசி வருகின்றனர். இருப்பினும், அரசியல் பரபரப்புகளுக்கு காரணமாக இருக்கின்ற, பாஜ, தவெக ஆகிய இரு கட்சிகளின் நகர்வுகள்தான் இப்போது ஹைலைட்டாக இருக்கிறது.
தொகுதி உடன்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க உள்ள நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கட்சியினர் 234 தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி தேடித் தரும் தொகுதிகள் எத்தனை, வெற்றி வேட்பாளர்கள் யார் என்ற தேடுதல் பணியில் இறங்கியுள்ளன. மொத்தம் உள்ள 234 தொகுதியிலும் மேற்கண்ட இரு கட்சிகளும் கணக்கெடுப்பு உள்ளிட்ட ‘ஆபரேஷன்’-ல் இறங்கியுள்ளன. தொகுதிகளை அலசி ஆராய்ந்ததில், இரு கட்சிகளுக்கும் ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
அது குறித்து பிரதான கட்சியின் முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான பிரமுகர்கள் பேசிக் கொண்டதில் இருந்து கசிந்த தகவல்தான் இது: தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 35-40 தொகுதிகளை பாஜ, தவெக போன்ற கட்சிகள் குறிவைத்து தேர்தலில் களம்காண இருக்கின்றன. அதனால் தொகுதி உடன்பாடுகள் ஏற்படும் போது அந்த தொகுதிகளையே கேட்டுப் பெறுவது என்றும் திட்டமிட்டுள்ளனவாம்.
இதனால் திமுக, அதிமுக இரு கட்சிகளுமே அந்த தொகுதிகளை தங்களிடம் வைத்துக் கொள்வதா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்துவிடுவதா என்று ஆலோசித்து வருகின்றன. ஆனால், மேற்கண்ட பிரச்னைக்குரிய தொகுதிகளை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் பட்சத்தில் அந்த இடங்களில் ஒரு வேளை வெற்றி வாய்ப்பை இழந்து பாஜக, தவெக போன்ற கட்சிகள் வந்துவிட்டால் என்ன ஆவது என்ற கவலையும் தற்போது அதிமுகவுக்கு வந்துவிட்டது.
அதனால், மேற்கண்ட 35-40 தொகுதிகளில் அதிமுக அல்லது திமுக வெற்றி பெறுகிறதோ இல்லையோ, பாஜக அந்த தொகுதிகளை கைப்பற்றக்கூடாது என்ற மனநிலைக்கு அதிமுக தொண்டவர்கள் வந்துவிட்டனர். அதனால், திமுகவுடன் ரகசிய பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதன்படி , மேற்கண்ட தொகுதிகளில் திமுக நிற்பது, அல்லது அதிமுக நிற்பது. முடிந்தால் நீங்கள் வெற்றி பெறுங்கள், இல்லை என்றால் நாங்கள் வெற்றி பெறுகிறோம். ஆனால் பாஜகவுக்கு இந்த இடங்களை விட்டுக் கொடுக்கக் கூடாது, என்று பேசி ரகசிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும், அதற்காக ஒரு சில நபர்களை நியமித்து இருதரப்பிலும் பேச உள்ளதாகவும் அதிமுக பிரமுகர்கள் பேசிக் கொண்டனர்.

