Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது: சீமான் கண்டனம்

சென்னை: 'காவிரி சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன். சகிப்புத்தன்மையே சனநாயகத்திற்குத் தேவையான அடிப்படை என்பதை மறந்து, அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது' என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; "காவிரி நதிநீர்ச்சிக்கல் உச்சம்பெற்று, மேகதாதுவில் அணை கட்டுவதில் மிகுந்த முனைப்போடு, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் ஒருமித்துச் செயல்பட்டு, முன்னெடுப்புகளைச் செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் அரசியல் காட்சிகள் மிகுந்த ஏமாற்றத்தைத் தருகின்றன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்ததுதான் அரசாங்கம் எனும் அடிப்படையை மறந்து, இருவரும் பகைமை பாராட்டுவதும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதும், அரசியல் பழிவாங்கல் செய்வதும்தான் ஆட்சி நிர்வாகமா? மக்களுக்கான அரசியலா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமான தலைகுனிவாகும்.

அரசியல் மேடைப் பேச்சுக்கெல்லாம், தவெக அரசு கைது நடவடிக்கை எடுக்குமென்றால், என் மீதும், என் தம்பி, தங்கைகள் மீதும் தனிநபர் விமர்சனமும், அவதூறும், ஆபாசத்தாக்குதலும் நாள்தோறும் தொடுக்கும் தவெகவினர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காதது ஏன்? அவ்வாறு அவதூறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதியரசரே, சட்ட நடவடிக்கை எடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்துவிட்டப் பிறகும், கைது செய்யாது விட்டிருப்பதேன்? அவர்கள் தவெகவின் ஆதரவாளர்கள் என்பதாலா? இன்று காலை 9 மணிக்குப் புகார் கொடுத்து, இரண்டு மணி நேரத்தில் முற்பகல் 11 மணிக்கெல்லாம் உதயநிதியைக் கைதுசெய்கிற காவல்துறையினர், என்னைப் பற்றி அவதூறுப் பரப்பியவர்களை இத்தனை நாட்களாகியும் கைதுசெய்யாது, காப்பாற்றுவது ஏன்? என்னைப் பற்றி மேடையில் ‘சீமான் பழைய சாமான்’ என்று தரம்தாழ்ந்து பேசிய மதிப்புமிகு லயோலா மணி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அப்படி பேசியதை ஊக்கப்படுத்தும் விதமாக பாடநூல் கழகத் தலைவராக அரசுப்பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்கு பெயரென்ன முதல்வர் அவர்களே? இதுதான் உங்களின் நாகரீக அரசியலா?

திருவைகுண்டம் தொகுதியின் தவெகவின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீதும், இன்னபிற தவெகவின் நிர்வாகிகள் மீதும் பாலியல் புகார்கள் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு, இதுவரை விசாரணை செய்யக்கூடாத நிலையில், இந்த விவகாரத்தில் மட்டும் இவ்வளவு வேகம் காட்டுவதேன்? காவிரி நதிநீர் விவகாரத்தில் காட்டாத வேகத்தை, கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்?

காவிரிப்படுகையில் குறுவை சாகுபடிப் பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியிருக்கும் நேரத்தில், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நதிநீர் விவகாரத்தில் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளைச் செய்யாது, தவெக அரசு தான்மையுடன் வறட்டுத்தனமான செயல்பாடுகளில் ஈடுபட்டு, தமிழ்நாட்டின் கவனத்தை ஒட்டுமொத்தமாகத் திசைதிருப்பி இருப்பது வெட்கக்கேடானது.

சகிப்புத்தன்மையே சனநாயகத்திற்குத் தேவையான அடிப்படை என்பதை மறந்து, அரசியல் மேடைகளில் பேசுவதற்கெல்லாம் கைது நடவடிக்கை என்பதை எந்த அரசு செய்தாலும் அது மிகத்தவறானது; மேடைகளில் தவறாகப் பேசினால், அவதூறு வழக்கு தொடுக்க வேண்டுமே ஒழிய, எடுத்த எடுப்பிலேயே கைதென இறங்குவது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.