Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

"சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் காங்கிரஸ் கட்சியின் முயற்சி பல்லிளிக்கிறது" -டி.ஆர்.பாலு விளாசல்

சென்னை: "சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் காங்கிரஸ் கட்சியின் முயற்சி பல்லிளிக்கிறது" என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிகழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்; ”அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்றத் தோழமையாக உடனிருந்தது திமுக.

அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால் அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம். குறிப்பாக, அன்னை சோனியா காந்தி அவர்கள், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சிறந்ததொரு நட்புணர்வையும், தனிப்பட்ட முறையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் பாசப்பிணைப்பையுமே காட்டி வந்தோம். அவரும், “நான் சகோதரர் என்று அழைக்கும் ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின்தான்” என்றெல்லாம் சொல்லி வந்தார். இன்று அவை முறிந்துவிட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை செய்திகளில் பார்த்தபோது ஏனோ திகைப்பு ஏற்படவில்லை.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, தேர்தலைச் சந்தித்து, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பணயம் வைத்து கயமையுடன் மாற்று அணிக்கு சென்றுள்ளார்கள். ஏதோ பெரிய அரசியல் ராஜதந்திர முடிவை எடுத்தது போலவும் அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. சந்தர்ப்பவாதத்துக்கு கொள்கை முகமூடி போடும் முயற்சி பல்லிளிக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சைத் துரோகம்.

குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். அது அவர்களது விருப்புரிமை. ஆனால் யாருக்கு ஆதரவளித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருப்பதே அரசியல் அறமாக இருக்கும். ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சியே தயங்கிய நேரத்தில் 2019 தேர்தலில் சென்னையில் அவரை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த நினைவுகள் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகின்றன.

இரண்டு தேர்தல்களில் ராகுல்காந்தியை முன்னிறுத்தி, அபார வெற்றியை ஈட்டித்தந்து நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியது திமுக கூட்டணி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொள்கை ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் தோளோடு தோள் நின்ற இயக்கம் திமுகழகம். தோல்வி எங்களுக்கு புதிதல்ல! துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல! ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும்! காலம் பதில் சொல்லும்!”என்று குறிப்பிட்டுள்ளார்.