Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

64 போலீஸ் அதிகாரிகளை மாற்றம் செய்த பட்டியலை முதல்வர் திருத்தியது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘போலீஸ் அதிகாரிகள் மாற்றமாமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தமிழகம் முழுவதும் 64 போலீஸ் அதிகாரிகளை மாற்றம் செய்வதற்கான பட்டியல் டிஜிபி அலுவலகத்தில் இருந்து நேற்று மாலை உள்துறைக்கு அனுப்பப்பட்டது. அதில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம், டிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆயுதப்படைக்கும், தற்போது சிறைத்துறையில் உள்ள மகேஸ்வர் தயாள் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும், தாம்பரம் கமிஷனராக அமுல்ராஜூம், ஆவடி கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்காவும், நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆவடி கமிஷனராக உள்ள சங்கர், நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாகவும், அபின் தினேஷ் மோடக், வேறு பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட உள்ளனர். அதேபோல, தென் மண்டல ஐஜியாக உள்ள பிரேம் ஆனந்த் சின்கா, மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் ஆகியோர் பதவி உயர்வு பெறுகின்றனர். மத்திய மண்டல ஐஜியாக உள்ள நிர்மல்குமார் ஜோஷி, தேர்தல் என்பதால் தனக்கு சாதாரண பதவி கொடுத்தால்போதும் என்று கேட்டு வந்தார்.

இதனால்தான் மாநிலம் முழுவதும் 64 அதிகாரிகளை மாற்றம் செய்வதற்கான பட்டியல் டிஜிபி அலுவலகத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. உள்துறையும் அந்தப் பட்டியலுக்கு ஒப்புதல் கொடுத்து, தலைமைச் செயலாளரிடம் வழங்கப்பட்டது. தலைமைச் செயலாளர் முருகானந்தம், அந்தப் பட்டியலை எடுத்துக் கொண்டு முதல்வர் அலுவலகம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்தப் பட்டியலில் முதல்வர் திருப்தி அடையவில்லை. ஏனெனில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பரிந்துரைக்கப்பட்ட மகேஸ்வர் தயாள், எஸ்பியாக இருந்தபோது சட்டம் ஒழுங்கு பணியை கவனித்துள்ளார். அதன்பின்னர் ஒன்றிய அரசு பதவிக்கு சென்று விட்டார். ஏடிஜிபியாக திரும்பி வந்தவருக்கு சிறைத்துறை வழங்கப்பட்டது. அவரை சட்டம் ஒழுங்கு பணியில் நியமித்தால் எப்படி அவரால் செயல்பட முடியும்.

அவருக்குப் பதில் ஐஜியில் இருந்து ஏடிஜிபியாக பதவி உயர்வு பெறும் தமிழ் அதிகாரி ஒருவருக்கு கொடுங்கள் என்று முதல்வர் கூறிவிட்டாராம். அதோடு தாம்பரம் கமிஷனராக அமல்ராஜை இரண்டாவது முறையாக நியமிப்பதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தாராம். அதோடு மேலும் ஒன்றிரண்டு பதவிகளை மாற்றும்படியும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

பணி மாறுதல் குறித்து முதல்வரிடம் சில விளக்கங்களை போலீஸ் அதிகாரிகள் கொடுக்க முயன்றபோது, சரியான தரவுகளுடன், முதல்வர் பேச ஆரம்பித்ததும், அதிகாரிகள் திணறிவிட்டார்களாம். குறிப்பாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி நியமனம் குறித்து முதல்வர் பேசியதைப் பார்த்ததும் அதிகாரிகள் ஆடிப்போய்விட்டார்களாம். இதனால் பட்டியல் மாற்றப்பட்டுத்தான் முதல்வர் அனுமதியோடு பட்டியல் வெளியாகிறதாம்.

‘‘பசுமையை மாற்றிய தந்தையால் சேலத்தில் தீப்பொறியாக சிதறிட்டாராமே ஸ்ரீ மகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘மாம்பழ கட்சியில் மகனுக்கு நெருக்கடி அதிகரிக்கும் வகையில் அடுத்த தடாலடியில் இறங்கி இருக்கிறாராம் தந்தையான தாஸ். அன்பு மகனின் இல்லத்தரசி வகித்த பசுமை பதவிக்கு தனது மூத்த மகளும், புதிய செயல் தலைமையான ஸ்ரீ ஆனவரை திடீரென நியமித்து அறிவித்துள்ளாராம்..

தனது தந்தை தாஸ், இல்லாத மாம்பழம் பிணத்துக்கு சமம். அன்பு செய்தது பச்சை துரோகம் என அவர் மேடையிலே தீப்பொறியாய் வெடித்தாராம்.. பதிலுக்கு தந்தையும் மேடையிலேயே கண்ணீர்விட்டு கனவுகளை வெளியிட குழுவே சோகத்தில் தழுதழுத்ததாம்.. இதன் தாக்கம் கனிக்கு கூடுதல் பலம் சேர்க்குமா? என்ற சலசலப்பு தைலாபுரம் வட்டாரத்தில் எழுந்துள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கட்சியில் முக்கிய பதவியை பிடிக்க வரும் தேர்தலில் வாரிசை களத்தில் இறக்க மாஜி அமைச்சர் தீவிரம் காட்டுகிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.‘‘கடலோர மாவட்டத்தில் உப்பளம் நிறைந்த தொகுதியில் இலை கட்சியின் மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ 2026 சட்டமன்ற தேர்தலில் நிற்பார் என அவருடைய ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்களாம்..

ஆனால், வரும் தேர்தலில் தனது வாரிசை களத்தில் இறக்க மாஜி அமைச்சர் திடீரென முடிவு செய்திருக்காறாம்.. இதற்கான வேலையில் அவர் தீவிரமாக இறங்கியிருக்காறாம்... வாரிசை களத்தில் இறக்கி விட்டு, கட்சியில் முக்கிய பதவியை பிடிக்க மணியானவர் காய் நகர்த்தி வருகிறாராம்.. மாஜி அமைச்சரின் கனவு பலிக்குமா என தெரியவில்லை. பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும் என கட்சிக்குள்ளே அரசல்புரசலாக பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பன்முனை கட்டண நடைமுறையால் நோயாளிகளின் உறவுகள் மூட்டை முடிச்சுகளுடன் அலைகிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஆன்மிகத்துக்கு பெயர் போன புதுச்சேரி மருத்துவத்திலும் முன்னேற்றத்தில் உள்ளதாம்.. போலி மருந்து விவகாரம் பூதாகரமானாலும் சேவைகளில் எந்த தொய்வும் இல்லையாம்.. அங்கு சுகாதார வளர்ச்சிக்கு ஒன்றிய சுகாதார நிறுவனம் முக்கிய பங்களிப்பு வகிக்கிறதாம்..

பல்வேறு வெளிமாநிலத்தவர் புற்று சிகிச்சைக்கு குவிவதால் அடுத்தடுத்து அங்கு வளர்ச்சி பணிகளும் நடந்ததாம்.. நோயாளிகளை அழைத்துவரும் உறவுகள் தங்க இரு இடங்களில் 24 மணி நேர விடுதிகள் செயல்படுகிறதாம்.. இதற்காக 10 ரூபாய் நுழைவு கட்டணமாக வாங்கப்பட்டதாம்..

தற்போது நடைமுறை மாற்றப்பட்டு, ஒவ்வொரு முறையும் வெளியே சென்று வரும்போது 10 ரூபாய் கொடுக்கணும் என கறார் வசூல் நடக்கிறதாம்.. வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஏழைகள் அதிகளவில் பயனடைந்த விடுதிக்கு ஒரேநாளில் பன்முனை கட்டணம் செலுத்த முடியாமல், தங்க இடம்தேடி ஆங்காங்கே மூட்டை முடிச்சுகளுடன் உறவுகள் அலைகிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.