தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலை சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் மனைவி பிரியா (39). இதே பகுதியில் கணினி மையம் நடத்தி வந்தார். இதே ஊரைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்துக்குமார் (36), தற்போது தட்டார்மடம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், பிரியாவின் அக்கா சுப்புலட்சுமிக்கும் பழக்கம் இருந்துள்ளது. கணவரை இழந்த சுப்புலட்சுமியிடம் இருந்து 20 பவுன் நகைகளை முத்துக்குமார் வாங்கி அடகு வைத்துள்ளார். இந்த நகைகளை திரும்ப கேட்டும் அவர் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனது சகோதரி நகையை பிரியா கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்றிரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார், இரவு 8.45 மணியளவில் கணினி மையத்தில் இருந்த பிரியாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை எஸ்ஐ கணேஷ் வழக்கு பதிந்து தப்பியோடிய ஏட்டு முத்துக்குமாரை கைது செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறார். கொலை வழக்கில் கைதான முத்துக்குமார், கடந்த 28ம் தேதிக்கு பிறகு வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மாமனாரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் கைதாகி சஸ்பெண்ட் ஆனவர், சில மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார். மேலும் இவர் மீது பாலியல் பலாத்கார வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தினந்தோறும் கொலைகள், கொள்ளை, பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், குற்றங்களை தடுக்க வேண்டிய போலீஸ் ஏட்டே இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளதோடு சட்டம், ஒழுங்கு நிலை குறித்து கேள்வி எழுந்து உள்ளது.




