காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு ரூ.17.31 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்
சென்னை: காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு, ரூ.17.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் ரூ.1 கோடியே 22 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஈரோடு அரசு மருத்துவமனை வளாக காவல் நிலையம், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் ரூ.1 கோடியே 28 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம், சென்னை மாவட்டம், கொத்தவால் சாவடியில் ரூ.3 கோடியே 99 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் ரூ.1 கோடியே 58 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் என மொத்தம் 4 காவல் நிலையங்கள்;
திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கத்தில் ரூ.82 லட்சத்து 24 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு பிரிவு குற்றப்புலனாய்வு துறை அலுவலக கட்டிடம் என மொத்தம் ரூ.8 கோடியே 90 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறை கட்டிடங்களை முதல்வர் விஜய் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
இதேபோல், சென்னை தெற்கு மாவட்டம், மேடவாக்கத்தில் ரூ.3 கோடியே 92 லட்சம் செலவிலும், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் ரூ.3 கோடியே 13 லட்சம் செலவிலும், வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரில் ரூ.1 கோடியே 36 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள 3 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் என மொத்தம் ரூ.8 கோடியே 41 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் கார்த்திக், காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் வெங்கடராமன், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வினித் தேவ் வான்கேடே, சென்னை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


