சாலையோரம் கிடந்ததாக நாடகமாடிய விவகாரம்: போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் குழந்தையை வளர்க்க ஜோடி சம்மதம்; ‘லிவிங் டுகெதர்’ மாணவியுடன் காதலன் பகீர் வாக்குமூலம்
* இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம்
சென்னை: சாலையோரம் குழந்தை கிடந்ததாக நாடகமாடிய விவகாரத்தில் போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கையால் குழந்தையை நாங்களே வளர்ப்பதாக ‘லிவிங் டு கெதர்’ கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலனும் சம்மதம் தெரிவித்துள்ளனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கடந்த சனிக்கிழமை வாலிபர் ஒருவர் சாலையோரம் கட்டை பையில் உயிருடன் குழந்தை கிடந்ததாக கொண்டு வந்தார். பிறகு அதை போலீசார் மீட்டு விசாரணை நடத்திய போது, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி முதலாமாண்டு படித்து வரும் மாணவி ஒருவர் ‘லிவிங் டுகெதர்’ மூலம் காதலனுடன் நெருக்கமாக இருந்ததால் பிறந்த குழந்தை என தெரியவந்தது. மேலும், அந்த குழந்தையை அவரது தந்தையே கீழே கிடந்ததாக கொண்டு வந்ததும் விசாரணையில் உறுதியானது.
இதை தொடர்ந்து திருவல்லிக்கேணி போலீசார் குழந்தை மற்றும் லாட்ஜில் தங்கி இருந்த தாயை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தை பிறந்த இடம் கோட்டூர்புரம் என்பதால் திருவல்லிக்கேணி போலீசார் கோட்டூர்புரம் போலீசாரிடம் பிடிபட்ட வாலிபரை ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதி ராஜா தலைமையிலான போலீசார் குழந்தையை கொண்டு வந்த வாலிபர் மற்றும் மருத்துவமனையில் உள்ள மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில், மாணவி மற்றும் அவரது காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
அதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஊட்டியை சேர்ந்தவர் பிரவீன் (21). இவர் ஊட்டியில் படிக்கும் போது, சேலத்தை சேர்ந்த இந்து (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கல்லூரியில் இளங்கலை படித்துள்ளார். பிரவீன் சீனியராக படித்து வந்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பிரவீன் இந்துவுடன் அவரது அறையில் ஒன்றாக கடந்த ஓராண்டுக்கு மேலாக ‘லிவிங் டுகெதர்’ முறையில் கணவன், மனைவி போல் இருந்துள்ளனர். இந்து, இளநிலை படிப்பு முடியும் நேரத்தில் கர்ப்பமாகி உள்ளார். கர்ப்பத்தை கலைக்க இந்து அனுமதிக்கவில்லை. கல்லூரி படிப்பு முடிந்து இந்துவை சேலத்தில் உள்ள வீட்டிற்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றுவிட்டனர்.
அதேநேரம் காதலன் பிரவீன் குரூப்-1 தேர்வுக்கு படிக்க சென்னை சைதாப்பேட்ைடயில் அறை எடுத்து தங்கி தனியார் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தார். இந்து, கர்ப்பமான நிலையில் இனி வீட்டில் இருந்தால் எல்லோருக்கும் தெரிந்துவிடும் அதனால் நானும் சென்னைக்கு வந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு பிரவீன் சென்னை பல்கலையில் எம்எஸ்சி படிப்புக்கு இந்துவை விண்ணப்பிக்க செய்துள்ளார். சீட் கிடைத்ததால்அடுத்த நாளே இந்துவை சென்னைக்கு அழைத்து வந்து கடந்த 6ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் பிரவீன் சேர்த்துள்ளார். அன்றே கோட்டூர்புரம் பகுதியில் உள்ள சென்னை பல்கலைக்கழக விடுதியிலும் இந்துவை சேர்த்துள்ளார்.
விடுதியில் சக மாணவிகளிடம் இந்து தனது காதல் விவகாரத்தை தெரிவித்துள்ளார். அவர்களும் இந்துவுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். கடந்த வாரம் விடுமுறை என்பதால் இந்துவுடன் தங்கி இருந்த 2 மாணவிகள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். அந்த நேரத்தில் திடீரென இந்துவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே தனது காதலனுக்கு போன் செய்து அழைத்துள்ளார். மேலும் விடுதி செக்யூரிட்டிகளிடம் எனக்கு உடல்நிலை சரியில்லை, எனது சகோதரியின் கணவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வருகிறார். அவர் வந்ததும் விடுதிக்குள் அனுமதியுங்கள் என்று போன் மூலம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, காதலன் பிரவீன் விடுதிக்கு வந்துள்ளார். அதற்குள் இந்து விடுதி அறையில் உள்ள கழிவறையில் பிரசவ வலியால் துடித்தபடி சத்தம் வெளியில் கேட்கக்கூடாது என்பதற்காக துணியை வாயில் வைத்து கடித்துக்கொண்டு பிரசவித்துள்ளார். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த நேரத்தில் காதலன் பிரவீனும் அறைக்கு வந்துவிட்டார். பிறகு அறையில் படித்த ரத்த கறைகளை சுத்தம் செய்து, ஒரு கட்டைப்பையில் குழந்தையை வைத்து ஒன்றும் தெரியாதபடி உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக ஆன்லைன் மூலம் ஒரு ஆட்டோ புக் செய்து பல்கலைக்கழக விடுதியில் இருந்து திருவல்லிக்கேணிக்கு வந்து லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
ஆட்டோவில் வரும் கோட்டூர்புரம் பாலத்தின் அருகே பிரவீன் சற்று நிறுத்துங்கள், சிறுநீர் கழிக்க வேண்டும் என்று குழந்தை உள்ள கட்டைப் பையை சாலையோரம் வீச முயன்றுள்ளார். ஆனால் ஆட்டோ டிரைவர் பிரவீனை பார்த்துக்கொண்டு இருந்ததால் குழந்தையை வீசாமல் ஆட்டோவுக்கு திரும்ப வந்துவிட்டார். பின்னர் லாட்ஜில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் இருவரும் குழந்தையை வளர்க்கலாமா அல்லது வெளியே வீசி விடலாமா என்று ஆலோசித்துள்ளனர். அதேநேரம் திருமணம் செய்யாமல் ‘லிவிங் டுகெதர்’ மூலம் குழந்தை பிறந்ததால் வீட்டில் பெற்றோர்கள் யாரும் இதற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்று முடியு செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் குழந்தையை சாலையோரம் வீச முடியாமல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சாலையோரம் குழந்தை கிடந்ததாக கூறி ஒப்படைத்துவிடலாம் என இருவரும் முழு மனதுடன் முடிவு செய்து, குழந்தையுடன் வந்த போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டதாக இருவரும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். அதைதொடர்ந்து கோட்டூர்புரம் போலீசார் குழந்தையை பெற்ற மாணவி மற்றும் காதலனிடம் குழந்தை வளர்ப்பது குறித்து கவுன்சலிங் அளித்தனர். அப்போது மாணவி எனது பெற்றோர் இதற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்ற நோக்கத்தில்தான் குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைக்க முடிவு செய்தேன்.
எனது பெற்றோர் எங்கள் காதலை ஏற்றுக் கொண்டால் நாங்கள் குழந்தையை வளர்க்கிறோம் என்று கூறினார். அதையே பிரவீனும் கூறினார். பின்னர் போலீசார் மாணவி மற்றும் அவரது காதலன் பெற்றோரிடம் பேசி சம்மதம் பெற்று கொடுத்தனர். அதை தொடர்ந்து தற்போது மாணவியும் அவரது காதலனும் குழந்தையை வளர்ப்பதாக போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இருவருக்கும் குழந்தை பிறந்துள்ளதால் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதமும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இருவரும் 18 வயது கடந்தவர்கள் என்பதால், விரைவில் ‘லிவிங் டுகெதர்’ ஜோடி போலீசாரின் துணையுடன் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இருந்தாலும், இந்திய சட்டத்தின்படி, 12 வயதுக்குட்பட்ட குழந்தையை பெற்றோர் கைவிடும் பட்சத்தில் அது குற்றமாக கருதப்படும். மேலும், குழந்தையின் மரணத்திற்கு இது வழிவகுத்தால், கொலை அல்லது மரணம் விளைவிக்கும் குற்றமாக கருதப்படும். எனவே காதலன் பிரவீன் மீது கோட்டூர்புரம் போலீசார் பிஎன்எஸ் 93 சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 12 வயதுக்குட்பட்ட குழந்தையை பெற்றோர் கைவிடும் பட்சத்தில் அது குற்றமாக கருதப்படும்.