போலீஸ் கண்காணிப்பு அலுவலகம் முன்பு இந்து முன்னணி பிரமுகர் குத்திக்கொ*: ராஜபாளையத்தில் நள்ளிரவில் பயங்கரம்
ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ்நிலையம் முன் நேற்று நள்ளிரவு இந்து முன்னணி பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அருகே, ஒத்தக்கடையில் உள்ள சுதந்திர நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் தணிக்காசலம் (46). டூவீலர் மெக்கானிக். இந்து முன்னணி பிரமுகர். இவர், நேற்று திருநெல்வேலியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, அங்கிருந்து மீண்டும் ஊருக்கு பஸ்சில் புறப்பட்டு வந்தார். நள்ளிரவு 12 மணியளவில் ராஜபாளையம் பழைய பஸ்நிலையத்தில் இறங்கி போலீஸ் கண்காணிப்பு அலுவலகம் முன்பு நின்றுள்ளார். அப்போது டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் திடீரென கூர்மையான ஆயுதங்களால் தணிக்காசலத்தின் இடது விலா பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளனர். பின்னர் மின்னல் வேகத்தில் டூவீலரில் தப்பிச் சென்றனர்.
இதில், படுகாயம் அடைந்த தணிக்காசலம் ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தணிக்காசலம் உயிரிழந்தார். இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, ‘மதுரைக்கு செல்ல வேண்டிய தணிக்காசலம் ராஜபாளையம் பழைய பஸ்நிலையத்தில் இறங்கியது ஏன்? நள்ளிரவில் கொடூரமாக கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கு முன்விரோதம் காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் சிசிடிவிகளை ஆய்வு செய்து வருகின்றனர். ராஜபாளையம் பழைய பஸ்நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு அலுவலகம் முன்பு நள்ளிரவில் நடந்த கொலை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலையான தணிக்காசலத்திற்கு சூரியகலா (40) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. கொலைகள் நடக்காத நாளே இல்லை என்னும் கூறுமளவுக்கு தமிழகத்தில் கொலைகள் நடந்து வருகின்றன. நேற்று கோவையில் கொலை, சென்னையில் விசிக பிரமுகர் படுகொலை, தூத்துக்குடியில் ரவுடி கொலை நடந்த நிலையில் இரவில் ராஜபாளையத்தில் கொலை நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



