Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அட்டப்பாடி மலை உச்சியில் 1,400 கஞ்சா செடிகள் அழிப்பு! கூடாரம் அமைத்து சாகுபடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்..

தமிழ்நாடு: கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடி மலை உச்சியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 1,400 கஞ்சா செடிகளை போலீசார் கண்டறிந்து பிடுங்கி அழித்தனர்.

தமிழ்நாடு–கேரள எல்லைப் பகுதியில் உள்ள புதூர் அருகேயுள்ள மலை உச்சியில், கூடாரம் அமைத்து தங்கி இருந்த ஒரு கும்பல் கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்துள்ளது.

கேரள மாநிலத்தில் தற்போது போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 'ஆபரேஷன் துபா' என்ற பெயரில் ரகசிய போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழ்நாடு–கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடி மலை உச்சியில் கஞ்சா தோட்டம் அமைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு, கஞ்சா தோட்டத்தை கண்டுபிடித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் சுமார் ஐந்து மாதங்கள் வயதுடையவை என தெரியவந்துள்ளது. அவற்றை அறுவடை செய்வதற்காக சம்பந்தப்பட்ட கும்பல் அப்பகுதியிலேயே கூடாரம் அமைத்து தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் அனைத்து கஞ்சா செடிகளையும் முழுமையாக பிடுங்கி, அங்கேயே தீ வைத்து எரித்து அழித்தனர்.

மேலும், தமிழ்நாடு–கேரள எல்லைப் பகுதியில் உள்ள மலைத் தொடர்களில் வேறு எங்காவது கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளனவா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.