Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநில காவலர் தேர்வு எழுதுவோருக்கு இலவச பேருந்து பயண வசதி - உத்தரப்பிரதேச அரசு அறிவிப்பு

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில், மாநிலக் காவலர் தேர்வு எழுதும் தேர்வர்கள் உரிய தேர்வு மையங்களுக்குச் செல்ல இலவசப் பேருந்துப் பயண வசதியை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 60,244 பதவிகளுக்காக நடைபெற உள்ள சிவில் காவலர் மற்றும் அதற்கு இணையான பதவிகளுக்கான ஆள்சேர்ப்புத் தேர்வில் சுமார் 29 லட்சம் தேர்வர்கள் பங்கேற்க உள்ளதால், அவர்களின் வசதிக்காக மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார். தேர்வர்கள் எவரும் வெயிலில் நிற்க நேரிடாத வகையிலும், தேர்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்யும் வகையிலும் ஏற்பாடுகளை செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் தேர்வர்களின் வசதிக்காக, போக்குவரத்துத் துறை சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான சிறப்புப் பேருந்துகளைச் சலுகைக் கட்டணத்தில் இயக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கான இலவசப் பயணத்தை மேற்கொள்ள பேருந்து நடத்துனரிடம் சில குறிப்பிட்ட ஆவணங்களை காட்ட மற்றும் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து, அதன் கூடுதல் நகல்களை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும் தேர்வு மையத்திற்குச் செல்லும் போது ஒரு நகலையும், தேர்வு முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பும் போது மற்றொரு நகலையும் பேருந்து நடத்துனரிடம் பயணச் சீட்டிற்குப் பதிலாக கட்டாயம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (UPSRTC) கீழ் இயங்கும் சாதாரண மற்றும் அதிவேகப் பேருந்துகளில் மட்டும்தான் தேர்வர்கள் இலவசமாகப் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.