போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்; அன்பில் மகேஷ்க்கு நாளை வரை நீதிமன்ற காவல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
சென்னை: மூன்று நாட்கள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, நளை (6ம் தேதி) வரை நீதிமன்ற காவலில் மீண்டும் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அனுமதி பெற்றுத் தருவதாக கூறி 400 கோடி ரூபாய் வசூலித்து மேசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த அக்டோபர் 26ம் தேதி கைது செய்தனர். அவரை, நவம்பர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், அவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, 3 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து அன்பில் மகேஷ், சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு நேற்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி, அன்பில் மகேஷின் உடற்தகுதி குறித்த மருத்துவ பரிசோதனை அறிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
பின்னர் அன்பில் மகேஷிடம் நீதிபதி, காவல்துறையினர் துன்புறுத்தினார்களா? முறையாக உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டதா? என்று கேட்டார். அதற்கு அன்பில் மகேஷ், தன்னை துன்புறுத்தவில்லை என்றும், முறையாக உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டதாகவும் பதிலளித்தார். இதையடுத்து, அவரை ஏற்கனவே உத்தரவிட்டபடி நாளை (6ம் தேதி) வரை நீதிமன்ற காவலில் மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, அன்பில் மகேஷின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


