நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளரும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண்ராஜ் காய்நகர்த்தி வருகிறார். இதற்காக தொகுதியில் முகாமிட்டுள்ள அவர், அழையா விருந்தாளியாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அரசியல் பேசுவதும், அதை விழா ஏற்பாட்டாளர்கள் கண்டிப்பதும் வாடிக்ைகயாகி வருகிறது.
இதற்கு அடுத்த கட்டமாக எம்எல்ஏ போன்று வலம் வந்து, பணியாளர்களை மிரட்டும் தொனியில் பேசுவது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருச்செங்கோடு சாணார்பாளையத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் சாக்கடை கழிவுநீர் சரிவர செல்லாமல் அடைத்துக் கொண்டிருப்பதாக அவரது கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு நேரில் சென்ற அருண்ராஜ், குடியிருப்பு வாசிகளை அழைத்து சென்று அப்பகுதியில் கழிவுநீர் கால்வாயை பார்வையிட்டு, திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் வாசுதேவனிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆணையாளர், திருச்செங்கோடு நகராட்சி துப்புரவு அலுவலர் சோலைராஜாவை அந்த இடத்தில் மக்கள் குறை என்னவென்று கேட்டு தீர்வு செய்து விட்டு வாருங்கள் என கூறியுள்ளார்.
இந்நிலையில் அருண்ராஜ் நகராட்சி துப்புரவு அலுவலர் வந்தவுடன் அவரிடம் இப்படி தான் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் அளவுக்கு வைத்திருப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். துப்புரவு அலுவலர் தினசரி கால்வாய் அடைப்பு எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற பணிகளுக்கு சென்று விட்டு ஒவ்வொரு பகுதியாக வந்து சுத்தம் செய்து கொண்டு தான் இருக்கிறோம். இதையும் சுத்தம் செய்து விடுகிறோம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அருண்ராஜ், நகராட்சி பணியாளரிடம் தினமும் அகற்றினால் எப்படி இவ்வளவு தேங்கி நிற்கும் என மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரிடம் மிரட்டும் தோனியில் பேசியுள்ளார். இது குறித்து உள்ளூர் மக்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தேர்தலில் நின்று தான் எம்எல்ஏ ஆகிவிட்டதை போன்று அருண்ராஜ் நடந்து கொள்கிறார். இதை பார்த்ததும் கங்கா முழுமையான சந்திரமுகியாக மாறிவிட்டாள்’ என்று திரைப்படத்தில் ரஜினி பேசிய வசனம் தான் எங்களுக்கு ஞாபகம் வந்தது,’’ என்றார். இது குறித்து அருண்ராஜிடம் கேட்டால், ‘கட்சியில் விஜய் எங்களுக்கு தந்திருப்பது பதவி அல்ல. பொறுப்பு. அதை கவனத்தில் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்,’’ என்றார்.

