Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பிரதமர் அலுவலக அதிகாரி எனக்கூறி மேற்குவங்க பாஜக அமைச்சரை ஏமாற்றிய பெண் யார்?: டெல்லியில் கைது செய்த போலீஸ்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி எனக் கூறி தலைமைச் செயலகத்தில் அமைச்சரை ஏமாற்ற முயன்ற பெண் டெல்லியில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேற்குவங்க மாநில தலைமைச் செயலகமான ‘நபன்னா’ வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் அஜய் போத்தாரின் அலுவலகத்துக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில், ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அலுவலகத்துடன் தொடர்புடைய பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட டாக்டர் ஆகாங்ஷா வித்யார்த்தி என்ற பெண், அமைச்சரை சந்திக்க அனுமதி கோரியிருந்தார். இதனை உண்மை என நம்பிய அமைச்சர் தரப்பும் அவருக்கு அனுமதி வழங்கியது.

அதன்பேரில் தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்த அந்த பெண், அமைச்சர் அஜய் போத்தாரை நேரில் சந்தித்துப் பேசி அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ஆனால், சந்திப்பின்போது அந்தப் பெண் பேசிய பொருத்தமற்ற வார்த்தைகளும், சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளும் அமைச்சருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது பின்னணி குறித்து அமைச்சர் அலுவலக அதிகாரிகள் ரகசியமாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றவில்லை என்பதும், அதிகாரியின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட போலி நபர் என்பதும் அம்பலமானது. இதுகுறித்து ஹவுரா மாவட்டம் ஷிப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 319(2), 204 மற்றும் 340(2) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதற்குள் அந்த கில்லாடி பெண் கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு தப்பிச் சென்றுவிட்டார். உடனடியாக டெல்லி விரைந்த ஹவுரா தனிப்படை போலீசார், மத்திய டெல்லியில் பதுங்கியிருந்த மோசடிப் பெண் ஆகாங்ஷா வித்யார்த்தியை அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற டிரான்சிட் காவலில் ஹவுராவுக்கு அழைத்து வந்தனர். உச்சக்கட்ட பாதுகாப்பு கொண்ட தலைமைச் செயலகத்திற்குள் அந்த பெண் எவ்வாறு ஊடுருவினார் என்பது குறித்தும், இதுபோன்ற மோசடி நாடகங்களை அரங்கேற்றி வேறு ஏதேனும் அதிகாரிகளை அவர் ஏமாற்றியுள்ளாரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.