Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பாகிஸ்தானை நேரடியாக சாடினார்; தீவிரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை: எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பிஷ்கெக்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26வது உச்சி மாநாடு கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடந்தது. மாநாட்டின் முதல் நாளில் ரஷ்ய அதிபர் புடின், ஈரான் அதிபர் பெசேஷ்கியன் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். நிறைவு நாளான நேற்று அனைத்து தலைவர்களும் மாநாட்டில் உரையாற்றினர். இதில், தீவிரவாதத்தை எதிர்த்து போராட எஸ்சிஓ அமைப்பு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி, பாகிஸ்தானை நேரடியாக சாடினார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பல உலக தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசியதாவது: தீவிரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் தீவிர சவாலாக தொடர்கிறது.

தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், நாம் வெறும் ‘நடவடிக்கை-எதிர்வினை’ என்ற அணுகுமுறையுடன் மட்டும் நின்றுவிட முடியாது. தீவிரவாதத்திற்கு நிதியளித்தல், ஆள்சேர்ப்பு, தீவிரவாதமயமாக்கல் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் ஆகிய முழு கட்டமைப்பையும் தகர்க்க வேண்டும். நாம் ஒரே குரலில் பேச வேண்டும். இந்த தீவிரமான விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தீவிரவாதத்தை கொள்கைக்கான கருவியாக பயன்படுத்தும் மற்றும் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தையும் ஆதரவையும் வழங்கும் நாடுகளுக்கு நாம் ‘தீவிரவாதம் யாருக்கும் ஒருபோதும் மதிப்புமிக்க சொத்தாக இருக்க முடியாது’ என்ற வலுவான செய்தியை அனுப்ப வேண்டும். ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இன்றைய உலகில், பாதுகாப்பின் எல்லைகள் மேலும் விரிவடைந்துள்ளன.

இதனால் ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் மோதல் அந்த பிராந்தியத்துடன் மட்டும் நின்றுவிடுவதில்லை என்பதை மேற்கு ஆசியா போர் நிரூபித்துள்ளது. அதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படுகிறது. இது எரிசக்திப் பாதுகாப்பு, கடல்சார் வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளை பாதிக்கிறது. இத்தகைய இடையூறுகளால் வளரும் நாடுகள் தான் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே, அனைத்து பதற்றங்களும் மோதல்களும் போர்க்களத்தில் அல்லாமல், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அமைதியான மற்றும் பாதுகாப்பான யூரேசியாவுக்கான நமது கூட்டு விருப்பம், ஆப்கானிஸ்தானின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையுடனும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மக்களின் மேம்பாட்டிற்கும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் இந்தியா தொடர்ந்து பங்களித்து வருகிறது. அதைத் தொடர்ந்து செய்யும். எஸ்சிஓ அமைப்பின் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். ஷாங்காய் மாநாட்டை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய 2 நாடுகளின் பயணத்தையும் நிறைவு செய்து டெல்லி திரும்பினார்.

சீனாவுக்கு அறிவுரை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதால் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை இந்தியா எதிர்த்து வருகிறது. இதை மறைமுகமாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘‘சந்தைகளை இணைத்தல், வர்த்தகத்தை எளிதாக்குதல் மற்றும் மேம்பாட்டிற்கான புதிய வழிகளைத் திறத்தல் ஆகிய முயற்சிகள் அனைத்தையும் இந்தியா ஆதரிக்கிறது. ஆனாலும், இத்தகைய முயற்சிகள் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பது அவசியம். இதுவே எஸ்சிஓ அமைப்பின் சாசனத்தின் அடிப்படை உணர்வுமாகும்’’ என்றார்.

தண்ணீரை ஆயுதமாக்க கூடாது: பாக். பிரதமர்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ‘‘தண்ணீர் நமது பிராந்தியத்தின் உயிர்நாடி. அது மில்லியன் கணக்கான உயிர்களை வாழ வைக்கிறது. நமது நிலத்தை வளப்படுத்துகிறது. நமது வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தையே பாதுகாக்கிறது. எனவே, தண்ணீரை ஒருபோதும் ஆயுதமாக்கக் கூடாது. அதை வற்புறுத்தலுக்கான கருவியாகப் பயன்படுத்த முடியாது, அரசியல் ஆதாயத்திற்காக ஒருபோதும் சுரண்டவும் முடியாது.

நமது பொதுவான நீர்நிலைகளை நிர்வகிக்கும் ஒப்பந்தங்கள் புனிதமான, கட்டுப்படுத்தும் சர்வதேச உறுதிமொழிகளாகும். அவை உங்கள் விருப்பப்படி ஒதுக்கித் தள்ளப்படக்கூடிய அரசியல் வசதிக்கான விஷயங்கள் அல்ல.’’ என்றார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைக்காமல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.