இந்தி சினிமா வில்லன் போல பிரதமர் மோடி பேசக் கூடாது: காங்கிரஸ் விமர்சனம்
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, எக்ஸ் சமூக தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலில் பிரசாரம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் தரந்தாழ்ந்து பேசி வருகிறார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியை, ஊடுருவல்காரர்களின் கூட்டணி என்றும், அவர்கள், மாநில மக்களின் வீட்டு மகள்களையும், அவர்களின் உணவையும் பறித்து விடுவார்கள் என்றும் மோசமாக பேசி வருகிறார். மக்களவைக்கு தேர்தல் நடந்தபோது பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி, எருமை மாடு, ஆட்டுக்கறி, மீன், தாலி போன்ற வார்த்தைகளை சேர்த்து எதிர்க்கட்சிகளை சாடினார்.
தற்போது, மகாராஷ்டிரா சட்டபேரவை தேர்தலுக்கான பிரசாரத்தில் மோடியின் பேச்சு அடிமட்ட நிலைக்கு தரம் தாழ்ந்துள்ளது. இந்தி சினிமாவின் சி-கிரேடு வில்லன் போல, பிரதமர் தரம் தாழ்ந்து பேசக்கூடாது. அவரது பேச்சு, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டபேரவைகளுக்கான தேர்தலில் பாஜ தோல்வி முகம் கண்டு வருவதை நிரூபிக்கிறது. மோடி, தான் வகிக்கும் பதவிக்கு, மீதமுள்ள காலத்தில் பெருமை தேடித் தரும் வகையில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.