திண்டிவனம்: பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதல் காரணமாக அக்கட்சி இரண்டாக பிளவுபட்டு 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலை சந்தித்தது. மாம்பழம் சின்னத்தில் அன்புமணி பாமக 18 தொகுதிகளில் களமிறங்கிய நிலையில் தர்மபுரி, விக்கிரவாண்டி, செஞ்சி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றன. அன்புமணி நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக பெரும்பாலான தொகுதிகளில் ராமதாஸ் தரப்பும் தனது ஆதரவாளர்களை களமிறங்கின. இருப்பினும் ராமதாசின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் செஞ்சி (கணேஷ்குமார்), விக்கிரவாண்டி (சிவக்குமார்) 2 தொகுதிகளை பாமக கைப்பற்றியது.
அதுமட்டுமின்றி தர்மபுரியில் தனது மருமகள் சௌமியா வென்றால், அதர்மபுரியாக மாறிவிடும் என கடுமையாக ராமதாஸ் விமர்சித்திருந்த நிலையில் அங்கும் செளமியா வெற்றிபெற்றார். இதனால் தைலாபுரம் வட்டாரம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. தனது ஆதரவு நிர்வாகிகளுடன் தைலாபுரத்தில் பலமுறை ராமதாஸ் ஆலோசனை நடத்தியபோது, பெரும்பாலானோர் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற விருப்பத்தை தெரிவித்திருந்த நிலையில், அதை நழுவவிட்ட சோகத்திலும் ராமதாஸ் தரப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.
சசிகலா மற்றும் ராமதாஸ் அணியால் குறிப்பிட்ட சில தொகுதிகளில் கணிசமாக ஓட்டுக்களை பிரிக்க மட்டுமே முடிந்த நிலையில், எந்தவொரு வெற்றியையும் அக்கட்சிகளால் பெற முடியாமல் போனது, நிர்வாகிகள், தொண்டர்களை மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகின்றன. இதனிடையே தவெகவுக்கு, பாமகவுக்கு ஆதரவளிக்கும் சூழல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தவெகவை ஒட்டுமொத்தமாக நிராகரித்த விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தேர்வான 2 பாமக எம்எல்ஏக்களும் தொகுதி மக்களின் விருப்பத்துக்கு எதிர்மாறான முடிவுகளை எடுப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என அவர்கள் கூறிவந்தாலும், இவ்விவகாரத்தில் வெளிப்படையாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் நழுவி வருகின்றனர்.



