சேலம்: பாமகவை திருட அன்புமணி முயற்சி என்று ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள், பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சேலத்தில் நேற்று பாமக அருள் எம்எல்ஏ அளித்த பேட்டி: பாமக தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை 55 எம்எல்ஏக்கள், 17 எம்பிக்கள், அதில் 5 அமைச்சர்கள். இதை எல்லாம் பெற்றுத்தந்தவர் ராமதாஸ். அதில் வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அன்புமணி தலையீடு என்றைக்கு பாமகவில் உயர்ந்ததோ, அன்று முதல் பாமக கீழ் நிலையில் சென்று கொண்டிருக்கிறது. எங்களுடைய அங்கீகாரத்தை அதற்கு பின்பு தான் இழந்தோம்.
பாமகவும், மாம்பழம் சின்னமும் எனக்கு தான் சொந்தம், நான் தான் எல்லாம் என்று சொன்னால், அது ராமதாசின் உழைப்பை திருடுவதற்கு சமம். 46 ஆண்டுகள் ராமதாஸ் கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பை, மகன் என்பதற்காக அவர் திருட முடியாது. திருடுவதற்கு பாமகவினர் அனுமதிக்கமாட்டார்கள். அதை எந்த நிலையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். அன்புமணியுடன் சேர்ந்து வக்கீல் பாலுவும் கட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறார்.
அன்புமணி அடிக்கடி தீயசக்தி என்று கூறுகிறார். அந்த தீயசக்தி, கைக்கூலி பாலுவும், சிலரும் தான். இவர்கள் அங்கிருந்து விலகினால் பாமக நல்ல வெற்றிப்பாதையை நோக்கி செல்லும். நாங்கள் ராமதாசை வந்து பாருங்கள் என்று தான் கூறுகிறோம். ஏ பார்ம், பி பார்மில் ஜி.கே.மணி தலைவராக இருந்தபோது கையெழுத்து போட்டார். தலைவர் பதவி முடிந்த பிறகு, இப்போதைய தலைவர் ராமதாசுக்கு தான் அந்த அதிகாரம் உள்ளது. மே 28ம் தேதி முதல் பாமக தலைவர் ராமதாஸ் தான். அவர் தான் கையெழுத்து போடுவார். 5.75 சதவீதம் வாக்காளர்களும் அவருக்கு தான் வாக்களிப்பார்கள். இதுசத்தியம்.
அன்புமணி பாமக தலைவர் நான் என்று கூறுகிறார். பாமக தலைவர் நான் என்று ஒரு தவறான நிறைவேற்றாத தீர்மானத்தை கொடுத்து, முகவரியை மாற்றியுள்ளனர். ராமதாசுக்கு தான் மாம்பழம் சின்னம் தர வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு 180 பக்கம் 23 ஆவணங்கள், ராமதாஸ் கடிதம் உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கிறோம். கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். நீதி நேர்மை கிடைக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அருள் எம்எல்ஏ கூறினார்.
