Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாமக ரெண்டு பட்டதால் கே.வி.குப்பத்தில் அதிமுக கோவிந்தா?

வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக இருப்பவர் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி. இவர் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதேபோல் கடந்த 2011ல் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016ல் அதிமுக கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன் வெற்றி பெற்றார். இவ்வாறு 3 முறை அதிமுக சார்பில் நின்றவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் 2011, 2021ல் அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்தது. கே.வி.குப்பத்தில் பாமகவிற்கென கணிசமான ஓட்டு வங்கி உள்ளது‌. வேலூர் மாவட்டத்திலேயே பாமக ஓட்டு அதிகம் உள்ள அணைக்கட்டு தொகுதிக்கு அடுத்து, கணிசமான ஓட்டு வங்கி இருப்பது கே.வி.குப்பம் தொகுதியில்தான். இந்நிலையில் தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அன்புமணி தரப்பான பாமக அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது. ராமதாஸ் தரப்பு பாமக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை.

ஆதலால் ராமதாஸ் ஆதரவாளர்களின் ஓட்டு கே.வி.குப்பத்தில் யாருக்கு செல்லும் என்பது பேசும் பொருளாகியுள்ளது. இதில் சுமார் 2 சதவீதம் வரை ராமதாஸ் தரப்பு ஓட்டு வங்கி இருந்தால் கூட வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். அவ்வாறு 3 முறை அதிமுக வெற்றி பெற்ற கே.வி.குப்பம் தொகுதியில் ராமதாஸ் தரப்பு வாக்குகளால் கே.வி.குப்பத்தில் அதிமுக வெற்றி பெற முடியுமா என்பது தற்போது பெரும் கேள்விகுறியாகவும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் திமுகவும் அதன் கூட்டணிகளும் கடந்த 3 முறை தோல்வி பெற்றதால் இந்த முறை வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். அதனால் அதிமுக போட்டியிட்டாலும், அந்த அணியில் பாமக (அன்புமணி) போட்டியிட்டாலும் தோல்வி நிச்சயம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.