Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினால் நாங்கள் என்டிஏவில் இருந்து விலக தயார்: பாமக தலைவர் அன்புமணி பேச்சு

சென்னை: பாமக தலைவர் அன்புமணி, நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா சென்று, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேசிவிட்டு, மேகதாது அணை கட்டும் பகுதியை பார்வையிட்டால், அது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு பாதகமாக இருக்கும். மேகதாது அணை கட்டுவதற்கு முன்னதாகவே, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகா, அங்கு அணைக்கட்டி விட்டால் நமக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடைக்காது. இது மிகப்பெரிய ஒரு தவறு.

ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில், ஒரு பொய்யான தகவலை வெளியிட்டுள்ளார். கர்நாடக அரசு, தமிழ்நாட்டின் அனுமதி பெற்று தான் அணை கட்ட வேண்டும் என்று இல்லை என உச்ச நீதிமன்றம் 2018ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்ததாக கூறியிருக்கிறார். அது முற்றிலும் தவறானது. அதேபோல் எதுவும் நடக்கவில்லை. ஆனால் மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்திலே, இதுபோன்ற பொய்யான தகவலை கூறியதால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு டெல்லியில் உள்ள தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினர்களிடம் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் எங்களை டெல்லிக்கு பிரதமரை சந்திக்க அழைத்து செல்லட்டும். நாங்கள் செல்வதற்கு தயாராக இருக்கிறோம். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காடுகளை அழித்து, கிரேட் நிக்கோபார் திட்டத்தை அமைக்க கூடாது என்று ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மேகதாது அணை கட்டும் போது 12,500 ஏக்கர் காடுகள், புலிகள் சரணாலயங்கள் 3, அவைகளை எல்லாம் அழித்து, அணை கட்ட வேண்டிய சூழ்நிலை வரும். எனவே மேகதாது அணை கட்டக் கூடாது என்று சொல்லுவதற்கு ராகுல் காந்திக்கு தைரியம் இருக்கிறதா? இல்லையேல் மாணிக்கம் தாகூருக்காவது அதை கூறுவதற்கு தைரியம் இருக்கிறதா? ராகுல் காந்தி கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்று ஒரே ஒரு வரி கூறிவிட்டால், நாங்கள் என்டிஏவிலிருந்து விலகுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.