சென்னை: பாமகவில் உள்ளவர்களிடம் பணத்தை கொடுத்து எனக்கு எதிராக செயல்பட தூண்டுகிறார் அன்புமணி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆக., 17 ல் நடக்கும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். போட்டிக்கு, ஆக.,09ல் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பும் அறிவித்துள்ளது. இது அக்கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அன்புமணி கட்சியை பறிக்க சூழ்ச்சி செய்கிறார் என ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,
அன்புமணி பொய் சொல்கிறார் - ராமதாஸ்
என்னை சந்திக்க வந்ததாக அன்புமணி பொய் சொல்கிறார். தைலாபுரம் வீட்டுக்கு என்னை சந்திக்க அன்புணி வரவில்லை; நான் கதவை அடைக்கவுமில்லை. பொய்களையும் கட்டுக்கதைகளையும் தொண்டர்களிடத்தில் அன்புமணி பரப்பி வருகிறார்
அன்புமணி கட்சியை பறிக்க சூழ்ச்சி செய்கிறார்
பாமகவை பறிக்க அன்புமணி சூழ்ச்சி செய்கிறார். பாமகவில் உள்ளவர்களிடம் பணத்தை கொடுத்து எனக்கு எதிராக அன்புமணி செயல்பட தூண்டுகிறார். ஐயா, ஐயா என்று சொன்னவர்களை ராமதாஸ் என்று சொல்ல வைத்தது அன்புமணிதான். பேச்சுவார்த்தைக்கு நான் வரமறுப்பதாக அன்புமணி பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்.
பணம் கொடுத்து நிர்வாகிகளை வளைத்துவிட்டார் அன்புமணி
பாமகவின் கிளை 34 அமைப்புகளின் நிர்வாகிகளை பணம் தந்து வளைத்துவிட்டார் அன்புமணி. பாமகவுக்கு மீண்டும் அங்கீகாரம் பெறும் நோக்கில்தான் தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். பணம் கொடுத்து சமூகவலைதளங்களில் என்னை பற்றி தவறாக
எழுத சொல்கிறார். பாமகவுக்கு நான் தலைமை ஏற்கக் கூடாது என்கிறார் அன்புமணி.
பணம் கொடுத்து என்னை விமர்சிக்க சொல்கிறார்
எதிரிகள் கூட என்னை பற்றி இவ்வளவு கேவலமான விமர்சனங்களை வைத்ததில்லை. பொதுவெளியில் அன்புமணி தன்னை பற்றி விமர்சிக்காமல் நாடகம் போடுகிறார். ஊடகம் முன்பு மனக்குமுறலை கூறுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுகிறேன். அன்புமணியை நல்ல பள்ளியில் படிக்க வைத்து எம்.பி. ஆக்கி பொறுப்புகளை ஒப்படைத்தேன்.
கூட்டணி முடிவால் அன்புமணியுடன் பிரச்சினை
வேட்பாளர், கூட்டணியை நான்தான் முடிவு செய்வேன் என்றதால் அன்புமணி பிரச்சினை செய்கிறார். கட்சி நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்து, அவர்களது ஆதரவை பெற முயற்சிக்கிறார். நான்தான் வேட்பாளர்களை தேர்வு செய்வேன் என அன்புமணி கூறுவதுதான் பிரச்சனைக்கு காரணம்.
அன்புமணியிடம் கட்சியை தந்து டம்மியா இருக்கமுடியாது
அன்புமணியிடம் கட்சியை கொடுத்துவிட்டு நான் டம்மியாக தைலாபுரத்தில் இருக்க முடியாது. கட்சியின் வளர்ச்சிக்காக இதுவரை அன்புமணி எதையும் செய்யவில்லை. செயல் தலைவர் பொறுப்பை ஏற்று பிழைத்துக்கொள் என அன்புமணிக்கு ராமதாஸ் அறிவுரை வழங்கினார்.