Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவேனா?.. யார் வதந்தியை கிளப்பிவிடுவது என்று எனக்கு தெரியும்: ராமதாஸ் ஆதங்கம்!!

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் பாமக சமூக நீதிப்பேரவை கூட்டம் தொடங்கியது. கடந்த சில மாதங்களாகவே பாமகவில் உட்கட்சி மோதல் வலுத்திருந்தது. கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டாலும் மூன்றாண்டுகளில் அனைத்து முடிவுகளையும் ராமதாஸை எடுத்து வந்திருக்கிறார். கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட விவகாரங்களில் அவரே முடிவு எடுத்து வந்திருக்கிறார். குறிப்பாக இளைஞர் அணி தலைவர் நியமன விவகாரத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடித்தது. அடுத்த அடுத்த நாட்களில் பொது இடங்களிலேயே இருவரும் எதிர்த்து பேச ஆரம்பித்தனர்.

இதனால் கட்சி தொண்டர்கள் தான் அதிர்ச்சி அடைந்தனர். மோதலின் உச்சமாக மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் அன்புமணி ராமதாசை மறைமுகமாக ராமதாஸ் சாடியது நிர்வாகிகளை ரசிக்க வைக்கவில்லை. இந்நிலையில் மூன்று நாட்களாக தைலாபுரத்தில் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனால் ராமதாஸ் அழைப்பு விருத்திருந்த நிலையிலும் அன்புமணி கலந்துகொள்ள வில்லை. மேலும், 99 சதவீத நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் பாமக சமூக நீதிப்பேரவை கூட்டம் தொடங்கியது. 4வது நாளாக தைலாபுரம் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தார். இதையடுத்து ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; பாமக நான் உருவாக்கிய கட்சி; நான் கூட்டும் கூட்டத்துக்கே சிலர் வரவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும், நான் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கப் போவதாக கட்சியினர் சிலரே வதந்தியை பரப்புகின்றனர். அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவேனா?. யார் வதந்தியை கிளப்பிவிடுவது என்று எனக்கு தெரியும் என ராமதாஸ் கூறினார்.