Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கடல்களில் 80 சதவீதம் வெளியேற்றப்படுகிறது; நிலத்தை விட நீரில் தான் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம்: ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்கள்

ஆக்சிஜன் பற்றாக்குறை அபாயம்

பிளாஸ்டிக் கழிவுகள் என்பது இன்றைய நிலையில் பூமி எதிர்கொள்ளும் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டுக்கு 350 மில்லியன் மெட்ரிக் டன் கழிவுகளை மனிதர்கள் உற்பத்தி செய்கிறார்கள். இதில் மாற்றங்கள் ஏற்படாவிட்டால் 2060ம் ஆண்டில் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தி, மேலும் 3 மடங்கு அதிகரித்து ஒரு பில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலகளாவிய பிளாஸ்டிக் கழிவுகளில் 80 சதவீதம் கடல்களில் வெளியேற்றப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி கடல்களில் மட்டும் 30 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதுதவிர ஆறுகள், ஏரிகளிலும் கோடிக் கணக்கான டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. பிளாஸ்டிக் பொருட்களை பொறுத்தவரை மக்காத நச்சுக்கழிவுகள் அதிகளவில் உள்ளன.

இதன்காரணமாக சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, மனித ஆரோக்கியத்திற்கும் உலை வைக்கிறது பிளாஸ்டிக். இப்படி மண்ணுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிப்பது மக்காத பிளாஸ்டிக் பயன்பாடு. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 3ம் தேதி ‘‘சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்தநாளில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் அபாயங்கள் குறித்த பல்வேறு தகவல்களை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளியிட்டு வருகின்றனர். இதுகுறித்து சேலம் சரகத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: மனிதனால் உருவாக்கப்பட்ட மக்காத குப்பை தான் பிளாஸ்டிக். இது இந்த பூமியை அசுத்தம் செய்யும் அபாயகரமான மாசுப்பொருளாக மாறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் அபாயம் என்பது உலகளாவிய பிரச்னையாக உள்ளது.

உலகில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கில் 79 சதவீதம், நமது நிலம் நீர் மற்றும் சுற்றுச்சூழலில் கழிவுகளாக சேர்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ஆண்டு தோறும் 15 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 4 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. முதலில் பூமியின் தரைதளத்தை அசுத்தம் செய்யத் ெதாடங்கியது பிளாஸ்டிக் கழிவுகள். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கடல் வளத்தையும் நாசம் செய்தது. நிலத்தை விட நீரில் தான் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கலக்கிறது. உலகில் உள்ள பெருங்கடல்களில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் டன் வீதம் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதாவது ஒரு சதுரகிலோ மீட்டர் கடலில் 25 ஆயிரம் மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் கலக்கிறது. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறதுது. மனிதன் உயிர்வாழ ஆக்சிஜன் மிகவும் முக்கியம்.

இந்த ஆக்சிஜன் என்பது மழைக்காடுகளில் இருந்து 28 சதவீதமும், கடல் நுண்ணுயிர்களில் இருந்து 70 சதவீதமும், மற்ற வழிகளில் 2 சதவீதமும் கிடைக்கிறது. கடலில் இருந்து கிடைக்கும் 70 சதவீத ஆக்சிஜன், பிளாங்டன் எனப்படும் நுண்ணுயிர்களின் மூலமே பெறப்படுகிறது. இந்த நுண்ணுயிர்கள் நானோ பிளாஸ்டிக்கால் அதிகளவில் அழிந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இந்த பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறையும் வெகுவாக ஏற்படும். நீர், நிலம், காற்று வழியாக பரவும் நுண்ணிய பிளாஸ்டிக் கழிவுகள், உணவுச்சங்கிலி வழியாக மனித உடலிலும் ேசர்கிறது. இது ரத்தத்தில் கலக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நெதர்லாந்தில் நடந்த ஆய்வுகளில் 80 சதவீத ரத்த மாதிரிகளில் மைக்ரோ பிளாஸ்டிக் குப்பை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படி மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது பிளாஸ்டிக். பூமியை தொடர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளால் நாம் நிரப்பிக் கொண்டிருக்கிறோம். இந்தநிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் மனிதர்கள் வேற்று கிரகங்களை நாடித்தான் செல்ல வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் உடனடியாக சாத்தியமில்லை. எனவே கொஞ்சம் கொஞ்சமாக பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து நாம் மீண்டு வர வேண்டும். இதுதான் எதிர்காலத்தில் நாமும் நமது தலைமுறைகளும் சந்திக்கப் போகும் பெரும் அபாயங்களுக்கு தீர்வாக அமையும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை திட்டம்

தமிழ்நாடு அரசு பிளாஸ்டிக் கழிவுகளின் தேக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் இதன் முக்கிய அம்சமாக பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பைகளை பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இது தமிழகத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கத்தை தடுப்பதற்கு ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்கின்றனர் பசுமை மேம்பாட்டு அமைப்பினர்.

மீன்கள் மூலம் வரும் பாதிப்பு

‘‘உலகம் முழுவதும் வாழும் மனிதர்களுக்கு முக்கிய உணவாக இருப்பது மீன். சிறிய மீன்கள் உண்ணும் உணவுகளில் பிளாஸ்டிக் பொருட்களும் அடங்குகிறது. இதில் சிலவகை பிளாஸ்டிக் மட்டும் செரிமானமாகி விடும். அப்படி செரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கில் இருக்கும் வேதிப்பொருட்கள் மீன்களின் உடலில் கலந்து விடும். இந்தச்சிறிய மீன்களை உண்ணும் பெரிய மீன்களுக்கு பிளாஸ்டிக் கடத்தப்படுகிறது. இதுபோன்று பிளாஸ்டிக் வேதிப்பொருளால் பாதிக்கப்பட்ட மீன்களை நாம் சாப்பிடும் போது பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகிறோம் என்று நேஷனல் ஜியோகிராபிக்ஸ் ஆய்வுகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதை நாம் புறந்தள்ளக்கூடாது,’’ என்பதும் சூழலியல் ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.