ரூ.34 ஆயிரம் கோடியிலான 15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் இடைக்கால பட்ஜெட் குறித்தும் விவாதம்
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.34,000 கோடிக்கான 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இடைக்கால பட்ஜெட் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மதியம் 12 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தை எந்த தேதியில் நடத்துவது, தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு பின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சரவை கூட்டத்தில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.34,237.39 கோடிக்கான முதலீடு, 55,096 நபர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாகக்கூடிய பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், திருப்பூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன. இதில் மிக முக்கியமான ஒரு திட்டம் பற்றி வருகின்ற 13ம் தேதி அறிவிப்பு வெளிவரும். 12ம் தேதி கன்வெர்ஷன் கான்க்ளேவ் நடைபெற உள்ளது. அன்றும் பல அறிவிப்புகள் வரவிருக்கின்றன.
குறிப்பாக, இதில் கெயின்ஸ் சர்க்யூட் லிமிடெட் என்னும் மின்னணுவியல் நிறுவனம், அதாவது பிரிண்டட் சர்க்யூட் போர்ட்ஸ், பிசிபிஸ், கேமரா மாடியூல்ஸ், லேமினேட்ஸ் இதையெல்லாம் செய்கின்ற கேமரா மாடியூல்ஸ் எல்லாம் இப்போது மிகவும் முக்கியமான தேவை. ஜான்சன் எலெக்ட்ரிக் - வாகன மின்னணு உப பாகங்கள், ஆக்சுவேட்டர்ஸ், பிஎல்டிசி மோட்டார்ஸ், பவர் கூலிங் மோட்டார்ஸ் இதையெல்லாம் உற்பத்தி செய்கின்ற ஒரு நிறுவனம்.
மேலும் எவர்வேன் கோத்தாரி புட்வேர் நிறுவனம் ஏறத்தாழ 25,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளனர். அடுத்ததாக, தமிழ்நாட்டிற்கு அடிடாஸ் பிராண்ட் கொண்டு வரப்பட உள்ளது. ஹுண்டாய் ஏற்கனவே இருக்கின்ற சில நிறுவனங்களுக்கான அந்த விரிவாக்கத்திற்காகவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஜெட்சால் எனும் ஒரு நிறுவனம் சோலார் செல் உற்பத்தி செய்வதற்கு தூத்துக்குடிக்கு வந்துள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை தொடர்ந்து உறுதி செய்யப்பட்டு, இந்தியாவின் நம்பர்-1 மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை தொடர்ந்து உறுதி செய்யும் இந்த வேலையை முதல்வர் செய்து வருகிறார். அந்த வகையில், தொழில் துறையில், இன்று ஏறத்தாழ ரூ.34,000 கோடிக்கான முதலீடுகள், 55,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வரவிருக்கின்றன. அதற்கான ஒப்புதல் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் மூலம் கிடைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

