Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

புகைப்படங்களில் பூக்கும் மாலைகள்

புகைப்படங்களில் பூக்கும் மாலைகள்… கழுத்தில் மஞ்சள் கயிற்றில் தாலி! போட்டோ எம்பிராய்டரியில் அசத்தும் பவித்ரா!

இன்ஸ்டாகிராமில் ஸ்க்ரோல் செய்யும் போது சட்டென சூர்யா -ஜோதிகாவின் மாலைகள் கைகளில் தொட்டுப் பார்க்கும்படி புகைப்படத்துக்கு வெளியேகாட்சி கொடுத்தன. மேலும் மஞ்சள் கயிற்றில் மங்களகரமான தாலியும் தளையத் தளைய தொங்கிக் கொண்டிருக்க இதென்ன புது கான்செப்ட் என தேடிப் பார்த்தால் கையில் எம்பிராய்டரி நூலும், ஊசியுமாக ஹெல்லோ சொல்கிறார் பவித்ரா ஸ்டாலின். திருமணப்புகைப்படங்களில் இருக்கும் மாலைகள், சட்டையில் எம்பிராய்டரி, குழந்தைகள் தலையில் மலர்க்கிரீடம் என வித விதமாக போட்டோ எம்பிராய்டரி செய்கிறார் பவித்ரா. மாதம் தோறும் பிஸி ஆர்டர்களுடன் பேசக்கூட நேரம் இல்லாமல் வேலைசெய்து கொண்டிருக்கும் பவித்ராவுக்கு அவரது குடும்பம்தான் முழு சப்போர்ட் என்கிறார்.

உங்களைப் பற்றியும் உங்க பின்னணி பற்றியும் கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பின்னலாடை நகரமான திருப்பூரில்தான். எங்க அப்பா ஒரு ஓவியர் மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையில (Graphic Designer) வேலை செய்றாரு. சின்ன வயசுல இருந்தே அப்பா வரைறதைப் பார்த்துப் பார்த்துதான் எனக்கும் கலை மேல ஒரு தனி ஈர்ப்பு வந்துச்சு. பள்ளியில நான் படிப்பிலயும் நல்லா வருவேன்; 12-ஆம் வகுப்புல என் பள்ளியிலேயே இரண்டாவது இடம் பிடிச்சேன். எனக்கு ஃபேஷன் டிசைனிங் படிக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா, குடும்பச் சூழ்நிலையாலயும், படிப்புல நல்லமதிப்பெண் எடுத்ததாலயும் என்னை பொறியியல் எலெக்ட்ரிக்கல் படிப்பில சேர்த்துட்டாங்க.

படிச்சு முடிச்சதும் உங்க வாழ்க்கைப் பயணம் எப்படி போச்சு?

படிச்சு முடிச்சதும் கலைத்துறையில பெரிய வருமானம் இருக்காதுனு நினைச்சு, அரசுத் தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகளுக்குத் தயாராக ஆரம்பிச்சேன். ஆனா, அதெல்லாம் எதுவுமே எனக்கு அமையல. அதுக்கப்புறம் எனக்கு திருமணமும் ஆச்சு. என் கணவர் ஸ்டாலின் எனக்கு பெரிய சப்போர்ட். கல்யாணத்துக்கு அப்புறம் ‘உனக்கு என்ன திறமை இருக்கோ, உனக்கு எது பிடிக்குமோ அதை தைரியமா பண்ணு’னு அவர் கொடுத்த ஊக்கம்தான் என்னை மீண்டும் ஆர்ட்& கிராஃப்ட் பக்கம் திருப்பியது.

எங்கே ஆரம்பிச்சது இந்த போட்டோ எம்பிராய்டரி?

கணவர் கொடுத்த தைரியத்துல கையால் ஓவியங்கள் வரைய ஆரம்பிச்சேன். அப்புறம் ‘போட்டோ மெர்ஜிங்’ (Photo Merging) ஆர்டர்கள் எடுக்க ஆரம்பிச்சேன். அதாவது, கல்யாண புகைப்படங்கள்ல தவறவிட்ட மறைந்த முன்னோர்களின் படங்களை இணைச்சு உருவாக்கித் தருவோம். அது மக்கள்கிட்ட ரொம்ப உணர்வுப்பூர்வமான வரவேற்பைப் பெற்று, ஒரு 3 வருஷம் மாசத்துக்கு 60 ஆர்டர்கள் வரை மிகச் சிறப்பா போச்சு. ஆனா, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வந்த பிறகு, அந்த ஆர்டர்கள் படிப்படியா குறைய ஆரம்பிச்சுடுச்சு. ஒரு கட்டத்துல ஆர்டர்களே இல்லாமல் போன நிலை கூட வந்தது.

பிறகு நடுவுல ‘ரெசின் ஆர்ட்’ (Resin Art) பண்ணிப் பார்த்தேன். ஆனா எனக்கு கைக்குழந்தை இருந்ததால, அதுல பயன்படுத்துற ரசாயன வாசனை குழந்தைக்கு ஒத்துவராம போயிடுமோனு பயந்து அதை நிறுத்திட்டேன். அப்புறம்தான் துணிகள்ல செய்யுற எம்பிராய்டரி வேலையைக் கையில் எடுத்தேன். ஆரம்பத்துல கைக்குட்டைகள், சட்டைகள்ல எம்பிராய்டரி பண்ணி, அப்புறம் அதை ஏன் புகைப்படங்களா மாத்தக்கூடாதுனு யோசிச்சுதான் ‘போட்டோ எம்பிராய்டரி’ செய்யத் தொடங்கினேன்.

இப்போ மக்கள் உங்ககிட்ட என்ன மாதிரி எம்பிராய்டரிகளை விரும்பி கேட்கறாங்க?

இப்போ தம்பதிகள் அவங்க உண்மையான தாலிக் கயிறைக் கொடுத்தா, அதை அப்படியே எம்பிராய்டரி புகைப்படத்துல பொருத்தித் தருவோம். இது இப்போ ரொம்ப பிரபலம். அதுமட்டுமில்லாம, திருமணத்தில் மணமக்கள் அணிந்திருந்த அதே நிற மாலைகள், வளைகாப்பு புகைப்படங்களில் மாலை, குழந்தைகள் தலையில் அணியும் கிரீடம் போன்ற விஷயங்களை எம்பிராய்டரியாக மாற்றித் தரச் சொல்லி அதிக ஆர்டர்கள் வருது.

ஒரு போட்டோ எம்பிராய்டரி செய்ய எவ்வளவு நேரமாகும்? இதன் கட்டணம் மற்றும் பிசினஸ் வளர்ச்சி எப்படி இருக்கு?

ஒரு சிறிய அளவிலான (A5) எம்பிராய்டரி செய்ய 2 முதல் 3 மணி நேரம் ஆகும். ஆரம்பத்துல மாசத்துக்கு 10 ஆர்டர்கள் வந்த நிலையில, இப்போ மாசத்துக்கு 40 முதல் 50 ஆர்டர்கள் வரை வருது. அளவுகளைப் பொறுத்து ரூ. 1,250-லிருந்து ரூ. 3,400 வரை வாங்குறேன்; இதுல போட்டோ பிரேம் மற்றும் பிரிண்டிங் எல்லாமே அடங்கிடும். தனித்துவமா இருக்கறதால் எனக்குப் போட்டிகளும் இன்னும் பெரிதா வரலை. மேலும் பட்ஜெட்டில் இருக்கறதால் நிறைய கிஃப்ட் ஆர்டர்கள் வருது.

ஒரு கைக்குழந்தையை வச்சுக்கிட்டு தொழில் செய்யுறது சவாலா இல்லையா?

என் பையன் பிறந்து 3 மாச குழந்தையா இருக்கும்போதே நான் வேலையை ஆரம்பிச்சுட்டேன். குழந்தைக்கு பால் கொடுத்துக்கிட்டே வேலை பார்த்த நாட்களெல்லாம் உண்டு. ஆரம்பத்துல இருந்தே பழகிட்டதால, இப்போ வீட்டு வேலை, குழந்தை, தொழில் மூணையும் என்னால நல்லா பேலன்ஸ் பண்ண முடியுது. என் கணவர் முழு ஆதரவா இருக்காரு; மாமியார், மாமனாரும் புரிஞ்சுகிட்டு உதவி செய்றாங்க. குறிப்பாக நான் வேலையில் இருந்தால் என் மாமனார், மாமியார் குழந்தையைப் பார்த்துப்பாங்க. மாமியார் சமையல் உட்பட எல்லாமே பெரும்பாலும் அவங்க தான் செய்வாங்க. அந்த ஆதரவு இருக்கறதால்தான் என்னால் தொடர்ந்து ஆர்டர்கள் எடுத்து முடித்துக் கொடுக்க முடியுது.

எதிர்காலத்திட்டங்கள் என்ன?

சாட்டின் ரிப்பன்கள், ஜிகினா மற்றும் கற்களைப் பயன்படுத்தி இன்னும் பல புதிய டிசைன்களை உருவாக்க யோசிச்சிட்டு இருக்கேன். நாம சுயமா உழைச்சு சம்பாதிக்கும்போது கிடைக்கிற ஆத்ம திருப்தியும், குடும்பத்துல கிடைக்கிற மரியாதையும் தனி. முதலில் வருமானம் சிறியதோ, பெரியதோ அதை வீட்டில் இருக்கறவங்க மதிக்கும் போது இன்னும் நமக்காகவும், நம் குடும்பத்துக்காகவும் வேகமாக , சந்தோஷமா ஓடலாம்.

- ஷாலினி நியூட்டன்