பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமை செயலாளர் அறிவுறுத்தல்
சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அரசு செயலாளர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறை ஆணையர், ஆகியோருக்கு எழுதிய கடிதம்: அரசு அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைதீர்ப்பு நாளின் போது மக்களிடம் இருந்து ஏராளமான மனுக்கள் பெறப்படுகின்றன. பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்ததிலிருந்து அதிகபட்சம் ஒரு மாத காலத்திற்குள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். பொதுமக்களுக்கு அவர்கள் அளித்த புகார் மனுக்கு மூன்று நாட்களில் ஒப்புகை சீட்டு வழங்குவதும், அதன் மீதான முன்னேற்றம் குறித்து தெரிவிக்க வேண்டும்.
கோரிக்கையை ஏற்றுக் கொள்ள சாத்தியமில்லை எனக் கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் நியாயமான பதில் வழங்க வேண்டும். பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கியும் அரசு அலுவலகங்களில் மனுக்களை கையாள்வதில் மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பதில்லை என்பது தொடர்பான புகார்கள் பொதுமக்களிடமிருந்து அரசுக்கு வந்த வண்ணமே உள்ளன. எனவே இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை அரசு அலுவலகங்கள் அனைத்தும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.


