Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முதல்வரிடம் மனு அளிக்க வந்த தவெக கூட்டணி தலைவரை 3 மணி நேரம் அறையில் பூட்டி வைத்தது ஜனநாயக விரோதம்: ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டையில் முதலமைச்சரிடம் கோரிக்கைகளை முன்வைப்பது தொடர்பாக சென்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் புதுக்கோட்டை கே.எம்.சரிப்-ஐ நேற்றைய தினம் அரசு அலுவலகத்திற்குள் வைத்து அதிகாரிகள் பூட்டிவிட்டுச் சென்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்துகிறது. இத்தனைக்கும் இவர் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக வேட்பாளராக போட்டியிட்டவர்.

சுமார் மூன்று மணி நேரம் அலுவலகத்திற்குள் அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அதிகாரிகள் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வந்த பிறகுதான் அலுவலகத்தை திறந்து அவரை வெளியே அனுமதித்துள்ளனர் என்ற தகவல், அரசு நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையையும் மனிதநேயமற்ற அணுகுமுறையையும் வெளிப்படுத்துகிறது. அவரை மூன்று மணி நேரம் அலுவலகத்திற்குள் பூட்டி வைப்பதற்கான அதிகாரத்தை அரசு அதிகாரிகளுக்கு யார் வழங்கியது? முதலமைச்சரிடம் மனு அளிக்கச் செல்லும் ஒருவர், தனது அடிப்படை மனித உரிமையையும் தனிமனித சுதந்திரத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

குறிப்பாக, முதலமைச்சரின் வருகையையொட்டி கோரிக்கைகளை முன்வைக்கச் சென்ற தலைவர் ஒருவருக்கு இத்தகைய அவமதிப்பு நேர்ந்திருப்பது, ஜனநாயகத்தில் மக்களின் குரலுக்கு அரசு நிர்வாகம் அளிக்கும் மதிப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.