Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மெய்யநாதன் கடிதம்

சென்னை: பேரரசர் பெரும் பிடுகு முத்தரையர் நினைவாக அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

முத்தரையர் வம்சத்தின் சிறந்த குறுநில மன்னரான பெரும்பிடுகு முத்தரையர், நீதியான நிர்வாகி, வீரமிக்க போர்வீரர், கலை மற்றும் விவசாயத்தின் பாதுகாவலராக தமிழ் மரபில் போற்றப்படுகிறார், செண்டலை, நார்த்தாமலை மற்றும் காவிரி வடகரையில் உள்ள பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுகள், அவரது ஆட்சி, கோயில் வழங்கல்கள் மற்றும் பாசனப் பணிகள் குறித்து சான்று பகர்கின்றன. அவரது பாசனப் பணிகள் இப்பகுதியை தானிய களஞ்சியமாக மாற்றின. “பெரும் பிடுகு” என்ற பொருள் “மாபெரும் இடி” என்பதாகும்.

இப்பட்டம் அவர்தம் சமகாலத்தவர்களிடையே ஏற்படுத்திய பிரமிப்பையும் மதிப்பையும் வெளிப்படுத்துகிறது. திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நாட்டுப்புறப் பாடல்களும் கோயில் திருவிழாக்களும் அவரது நினைவை உயிரோடு வைத்துள்ளன. பேரரசர் பெரும் பிடுகு முத்தரையர்க்கு நினைவு அஞ்சல்தலை வெளியிடப்படுவதன் மூலம், தேசிய கட்டுமானத்திற்கு ஆரம்பகால தமிழ் மன்னர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படும், இடைக்காலத்திற்கு முந்தைய தமிழ் அரசியல் மற்றும் பண்பாட்டைப் பற்றி இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படும்,

தமிழ்நாட்டினை இந்தியாவின் ஏனைய பகுதிகளுடனான உணர்வுபூர்வ ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும். நினைவு அஞ்சல்தலை வடிவமைப்பிற்கு தேவையான காப்பக ஆவணங்கள், நிபுணர் ஆலோசனை மற்றும் வடிவமைப்பு உள்ளீடுகள் உள்பட அனைத்து தேவையான ஒத்துழைப்புகளையும் தமிழ்நாடு அரசு வழங்கத் தயாராக உள்ளது, ஒன்றிய அரசின் சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.