Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நிதி நிறுவனங்களிடம் ஏமாந்தவர்களுக்கு பணத்தை மீட்டுத்தர அதிமுக அரசைவிட திமுக அரசு தீவிரமாக செயல்படுகிறது: பேரவையில் முதல்வர் தகவல்

தமிழக சட்டப் பேரவையில் நேற்று காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பாபநாசம் ஜவாஹிருல்லா (மமக) பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை சேகரித்து எனது தொகுதியில் உள்ள ஒரு நிறுவனம் கொள்ளையடித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியை தலைமையிடமாகக் கொண்ட 3 நிதி நிறுவனங்கள், பல அப்பாவி மக்களிடமிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய்களை கொள்ளையடித்திருக்கின்றன. எனவே, மக்களுடைய பலவீனத்தைப் பயன்படுத்தி, முதலீடு என்ற பெயரில் கொள்ளையடிக்கக்கூடிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது மிகமிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: டெபாசிட் பெற்று பொதுமக்களை ஏமாற்றுவோர் மீது கடும் நடவடிக்கையை எந்தளவிற்கு எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற வினாவை உறுப்பினர் எழுப்பினார். அதற்காக தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தை தொடர்ந்து நடத்தி பொதுமக்கள், ஏற்கனவே ஏமாந்திருக்கக்கூடிய பொதுமக்கள் இன்னும் அவர்கள் விழிப்புணர்வுகூட ஏற்படாமல் இன்னும் ஏமாந்து கொண்டிருக்கிறார்களே என்ற வருத்தத்தோடு சுட்டிக்காட்டுகிற அதேநேரத்தில், ஆனால் நமது அரசால் பெருமளவில் அதை கட்டுப்படுத்தி ஓரளவிற்கு குறைத்திருக்கிறது. ஏமாற்றியுள்ள டெபாசிட் நிறுவனங்களை பொறுத்தமட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் ரூ.97 கோடியே 41 லட்சம் மீட்கப்பட்டு டெபாசிட்தாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 4 ஆண்டுகளிலேயே ரூ.102 கோடியே 96 லட்சம் ரூபாய் டெபாசிட்தாரர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் ஏமாற்றிய நிறுவனங்களின் 854 கோடியே 74 லட்சம் ரூபாய் சொத்துகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் 2,670 கோடியே 89 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட சொத்துகளை முடக்கும் அரசு ஆணைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் 53. ஆனால், திமுக ஆட்சியில் 108 அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல அதிமுக ஆட்சியில் 103 கோடியே 24 லட்சம் ரூபாய் சொத்துகள் மட்டுமே அட்டாச்மெண்ட் செய்யப்பட்ட நிலையில் திமுக ஆட்சியில் பொதுமக்களை ஏமாற்றிய நிறுவனங்களின் 319 கோடியே 29 லட்சம் ரூபாய் சொத்துகள் அட்டாச் செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்து டெபாசிட் பெற்று ஏமாற்றியிருக்கக்கூடிய நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொடுக்க இந்த அரசு முன்பிருந்த அதிமுக அரசைவிட தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.