நம் வாழ்க்கை நம் கையில் இருக்கிறது என்பதையும்,அதை நாம் விரும்புவது போல் அமைக்கலாம் என்பதையும், நம் வாழ்க்கை பற்றி நமக்கு அக்கறை இருக்கிறது என்பதையும் நம்புங்கள். ஏனெனில் நாம் எடுக்கும் முடிவுகள், தீர்மானிக்கும் விஷயங்கள், நம் வாழ்வின் திசையைத் தீர்மானிக்கின்றன. மேலும் சரியான திசையில் நம் வாழ்க்கையைத் செலுத்துகின்றன என்று டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் கருத்தோட்டத்தின் படி நம்மை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
தன்னம்பிக்கை புத்தகம் வாசிப்பதாலோ, தன்னம்பிக்கை பயிலரங்கில் கலந்து கொண்டு பயிற்சி எடுப்பதாலோ மட்டும் நாம் வெற்றி பெற முடியாது.நாம் எடுத்துக் கொண்ட கருத்தையும், பயிற்சியும் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமானது.
மனதளவில் நான் மாற வேண்டும் என்று தீர்க்கமான முடிவு எடுத்தால் மட்டுமே நம்முள் மாற்றத்தைக் காண முடியும்.ஒரு தொழிலதிபர் ஒரு ஆலோசகரிடம், ஐயா நான் சந்திக்கின்ற பிரச்சனைகள் ரொம்ப பெரிது, உங்களுடைய சின்ன யோசனையினால் அதை தீர்க்க முடியுமா?என்றார். ஆலோசகர் சொன்னார் உங்கள் கார் விளக்கின் ஒளி மாதிரி தான் என் யோசனையும், முதலில் சின்னதாக கொஞ்சம் தூரத்துக்கு தெரியும் அதை வைத்து நீங்கள் முன்னேற, முன்னேற தொடர்ந்து பாதை தெரியும் என்றார் அந்த ஆலோசகர்.
பூ.கோ.சரவணன் இவர் யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதி அதில் வென்று இந்திய வருவாய் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர். பொன்பத்தி என்ற கிராமத்தைச் சேர்ந்த இவரது அப்பா ஒரு கேஸ் ஸ்டவ் மெக்கானிக், அம்மா தமிழ் ஆசிரியர், ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவரால் எப்படி வெற்றி பெற முடிந்தது? தனக்கு எந்த வசதியும் இல்லையே நான் கிராமத்தில் இருக்கிறேன் என்று புலம்பாமல் விடாமுயற்சி இவரிடம் இருந்ததால் தான் என்னவாக வேண்டும் என்று தீர்மானத்துடன் படிப்பில் கவனம் செலுத்தி உள்ளார்.
புத்தகங்கள் வாங்கக் கூட போதிய பண வசதி இல்லாத நிலையிலும் நண்பர்களின் உதவியால் படிப்பைத் தொடர்ந்து உள்ளார். எத்தனை கஷ்டம் வந்தாலும் என்னால் முடியும் என்ற உந்து சக்தியை எப்போதும் தனக்குள் அசை போட்டுக் கொண்டே இருந்துள்ளார். இறுதியில் எல்லா தடைகளையும் தாண்டி அரசுப் பணிகள் சேர்ந்துள்ளார்.
இன்னொருவர் எம்.செம்மாறன் யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று உத்தரபிரதேசத்தில் உதவி வனப் பாதுகாப்பாளராக பணியாற்றுகிறார். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவைச் சேர்ந்த ஆயக்காரன் குலம் என்ற குக்கிராமம் தான் செம்மாறன் பிறந்தது.மின்சாரம் இல்லாத வீடு, அன்றாடம் சைக்கிள் மிதித்து ஐந்து கிலோமீட்டர் சென்றால்தான் பள்ளிப் படிப்பு. தமிழ் வழிக் கல்வி பயின்றார். எப்போதும் வகுப்பில் முதல் மாணவன் இவர்தான். இளநிலை பட்டம் படிக்கும் வரையில் யூபிஎஸ்சி தேர்வு பற்றிய இவருக்கு எதுவும் தெரியாது. ஆனால் நீ டாக்டர் ஆக வேண்டும் அல்லது கலெக்டராக வேண்டும் என்று தன் தாய் சொன்னது மட்டும் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அம்மா ஆசைப்பட்டது போலவே மருத்துவர் ஆகலாம் என்று கடுமையாக முயன்றார். ஆனால் கிராமப்புற பள்ளியில் கணிதம், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்கள் கூட இல்லை.மருத்துவ நுழைவுத் தேர்வு குறித்து விழிப்புணர்வும் இல்லை. ஆகையால் மருத்துவ கனவு போனது. ஆனாலும் விலங்குகள் குறித்த மருத்துவ பட்டப் படிப்பான கால்நடை மருத்துவ படிப்புக்கு சென்னை அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த கல்லூரியில் படிக்கும் போது தான் அவரது யூபிஎஸ்சி தேர்வுக்கு வெற்றித் தளம் அமைந்தது. இன்று உதவி வனப் பாதுகாப்பாளராக பணியும் கிடைத்துவிட்டது.
இந்த இருவருமே கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான், இவர்களைப் போல நிறைய பேரை உதாரணம் சொல்லலாம்.வெற்றி பெறுவதற்கு எளிமையான வழி நான் இதுவாகத்தான் ஆகப்போகிறேன் என்று இலக்கை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். கால்பந்தாட்டம் ஆடுவது போல தான் வாழ்க்கை, கோல் எது என்று தீர்மானித்துக் கொண்டு விளையாட வேண்டும்.எதிர் அணிகள் எத்தனை பேர் நின்று தடுத்தாலும், நம் குறிக்கோள் கோல் போடுவதில் இருக்க வேண்டும்.கோல் எது என்று தீர்மானம் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதற்கு உதாரணமாக இந்த சாதனை பெண்மணியையும் சொல்லலாம்.
அரசு வேலை கிடைப்பதே சாதாரண விஷயம் அல்ல, அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு பெண் தன் 23 வயதிற்குள் 19 அரசுத் தேர்வுகளில் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்! என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், அது நிஜம்!
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே உள்ள தில்தா என்ற சிறிய பகுதியைச் சேர்ந்தவர் சாரு பாண்டே. வயது வெறும் 23 தான். இந்தியாவின் மிகக் கடினமான போட்டித் தேர்வுகளாகக் கருதப்படும் SSC (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்), IBPS மற்றும் எஸ்பிஐ (SBI) உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை அடுத்தடுத்து எழுதி, அசால்ட்டாக 19 தேர்வு களில் பாஸ் செய்து ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
இந்த அசாத்திய சாதனைக்காக, வரும் சுதந்திர தினத்தன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் (Rashtrapati Bhavan) நடைபெறும் புகழ்பெற்ற ‘அட்-ஹோம்’ (At-Home) விருந்தில் கௌரவிக்கப்பட உள்ளார் சாரு. இன்று இந்தியாவின் லட்சக்கணக்கான அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பெரும் உத்வேகமாக மாறியிருக்கும் சாருவின் வெற்றியின் இரகசியத்தை நாமும் தெரிந்து கொள்வோம்.
தற்போது சென்னையில் மத்திய அரசின் ‘அசிஸ்டென்ட் ஆடிட்டர்’ (Assistant Auditor) ஆகப் பணியாற்றி வரும் சாரு, தன்னை ஒருபோதும் ‘அதிபுத்திசாலி’ என்று சொல்லிக் கொள்வதில்லை.
பள்ளியில் படிக்கும் போது சாரு ஒரு சாதாரண மாணவிதான். கணக்கு பாடம் மட்டும் அவருக்கு கொஞ்சம் நன்றாக வரும், மற்றபடி எல்லாரையும் போல ஆவரேஜ் ஸ்டூடென்ட் தான். சாருவின் பெற்றோருக்கு அவர் ஒரு பேராசிரியராக வர வேண்டும் என்பதுதான் ஆசை.
ஆனால்,சாருக்கு போட்டித் தேர்வுகளின் மீது ஆர்வம் வந்தது. என் முடிவுக்கு குடும்பத்தினர் முழு ஆதரவு தந்தனர்.திறமை என்பதை விட, தொடர் உழைப்பும் சுயஒழுக்கமும் தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளது என்கிறார் சாரு புன்னகையுடன்.
அரசுத் தேர்வுக்குப் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் ஒரு தேர்வு எழுதிவிட்டு, அதன் முடிவு வரும் வரை நகத்தைக் கடித்துக் கொண்டு, டென்ஷனாகக் காத்திருப்பார்கள். ஆனால் சாருவின் பாணி முற்றிலும் வேறு!
அவர் ஒரு தேர்வு எழுதி முடித்த அடுத்த நிமிடமே, அதன் முடிவை நினைத்துக் கவலைப்படாமல் அடுத்த தேர்வுக்கான படிப்பைத் தொடங்கிவிடுவார்.
ஒரு தேர்வின் முதல் மெரிட் லிஸ்ட்டில் என் பெயர் வராவிட்டால் என்ன, அடுத்த லிஸ்ட்டில் கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.அதனால் தேர்வு முடிந்ததும் அதைப்பற்றி ஓவராக யோசிக்காமல், அடுத்த டார்கெட்டை நோக்கி ஓட ஆரம்பித்துவிடுவேன் என்கிறார் சாரு. இந்த பாசிட்டிவ் அப்ரோச் தான் அவரை மன அழுத்தமில்லாமல் ஓட வைத்துள்ளது.
சாருவின் பயணத்திலும் ஆரம்பத்தில் சில தோல்விகள், சறுக்கல்கள் இருந்தன. ஆனால், அவர் அதை முட்டுக்கட்டையாக நினைக்காமல், அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான படிக்கட்டாக மாற்றிக் கொண்டார். தோல்வி என்பது பயணத்தின் ஒரு பகுதிதான் என்பதை புரிந்து கொண்டு, ஒவ்வொரு முறை தோற்கும் போதும் இன்னும் அதிக உத்வேகத்துடன் களமிறங்கினார்.
24 மணி நேரமும் புத்தகப் புழுவாக இருந்தால் தான் பாஸ் பண்ண முடியும் என்ற விதியை உடைத்துள்ளார் சாரு.எனக்கு சமையல் செய்வதிலும், ஊர் சுற்றுவதிலும் (Travel) அலாதி பிரியம். எவ்வளவு பெரிய தேர்வு நெருங்கினாலும், எனக்கான ரிலாக்ஸ் டைமை நான் விட்டுக்கொடுத்ததே இல்லை. மைண்ட் ஃப்ரீயாக இருக்க 10 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை சாதாரணமாக வாக்கிங் போவேன். சில நேரங்களில் குடும்பத்தோடு 5 முதல் 10 நாட்கள் வரை ஜாலியாக டூர் போய்விட்டு வருவேன் என்று ஆச்சரியப்படுத்துகிறார் சாரு. கடின உழைப்புக்கு இணையாக மன அமைதியும் முக்கியம் என்பதற்கு இவரே சாட்சி!
கணக்குப் பாடத்தின் மீதுள்ள ஆர்வத்தால், பொது நிதி மற்றும் வரிப் பணம் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள விரும்பிய சாரு, தற்போது ஆடிட்டிங் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஆனால், 19 தேர்வுகளில் வென்ற பிறகும் அவரது வேட்கை அடங்கவில்லை. அடுத்து பிஹெச்டி (PhD) படிக்க வேண்டும், அதோடு இந்தியாவின் மிக உயரிய தேர்வான யுபிஎஸ்சி (UPSC) எழுதி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே இவரது அடுத்த இலட்சியம்!
சாரு பாண்டே இளைஞர்களுக்குச் சொல்லும் ‘சிம்பிள்’ அட்வைஸ்:தோல்விகளைக் கண்டு ஒருபோதும் சோர்ந்து போகாதீர்கள். அரசு வேலைக்கான வாய்ப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதிர்ஷ்டத்தை நம்பாமல் சரியான திசையில் உழையுங்கள். தொடர்ந்து கடினமாக உழையுங்கள். பொறுமையைக் கைவிடாதீர்கள். உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கட்டும். ஒரு சறுக்கலோடு உங்கள் பயணத்தை நிறுத்திவிடாதீர்கள்!
எந்தவித குறுக்கு வழிகளும் இல்லாமல், அசாத்திய திறமையாளர் என்ற பந்தா இல்லாமல், வெறும் ‘சுய ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி’ என்ற ஒற்றை ஆயுதத்தை வைத்துக் கொண்டு சிகரத்தைத் தொட்டுள்ள சாரு பாண்டே, நிஜமாகவே இந்த புதியதலைமுறை இளைஞர்களின் ஆகச் சிறந்த முன்மாதிரி என்று சொன்னால் மிகையாகாது.


