Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சதுரகிரிக்கு பக்தர்கள் தினமும் செல்ல அனுமதி: மலைக்கோயிலில் இரவில் தங்கினால் கைது; ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு தினமும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், சுந்தரபாண்டியத்தை சேர்ந்தவர் சடையாண்டி. இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் உள்ள ஆனந்தவள்ளி அம்மன் கோயிலில் பழங்காலம் முதலே எங்கள் சமூகத்தினர் நவராத்திரி விழா நடத்துகின்றனர். விழாவையொட்டி கோயிலில் 10 நாட்கள் வழிபட மற்றும் 3 நாட்கள் இரவில் தங்க அனுமதிக்க வனத்துறை, அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், ‘‘சுந்தர மகாலிங்கசுவாமி மலைக்கோயில் சாப்டூர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இப்பகுதி வில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. தற்போது வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகிறது. 2015 மே 17ல் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 4 ஆயிரம் பக்தர்கள் மலையில் மாட்டிக் கொண்டனர். இதில் 15 பேர் இறந்தனர். இதன்பின் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாளில் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் தாணிப்பாறை வழியாக சோதனைச்சாவடி மூலம் அனுமதிக்கப்படுகின்றனர். மழை அறிவிப்பை பொறுத்து அனுமதி வழங்கப்படுகிறது. தாணிப்பாறை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த சூழலியல் மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் உதவியுடன் நுழைவாயிலில் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இரவில் தங்க அனுமதித்தால் சமையல் செய்ய முயற்சிக்கின்றனர். இதனால் காட்டுத்தீ பரவ வாய்ப்புள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:2015ல் நடந்த சம்பவம் போல் மீண்டும் நிகழாமல் தடுக்க கோயில் அருகே பாலங்கள் கட்டுதல் போன்ற மேம்பாட்டுப் பணிகள் ₹9 கோடியில் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு 2022-23ல் சட்டசபையில் அறிவித்துள்ளது. அனைத்து மக்களின் நம்பிக்கை, வழிபாட்டு சுதந்திரத்தை அரசியலமைப்பு பாதுகாக்கிறது. இந்த உரிமையில் தலையிடுவது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறும் மனுதாரரின் வாதம் ஏற்புடையது. உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மக்களின் உரிமைகள், வனம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சமநிலையை பேண வேண்டும். சதுரகிரி மலைக்கு புனித யாத்திரை செல்வது பாக்கியம் மற்றும் பெருமைக்குரிய சந்தர்ப்பமாகும்.

புலிகள் காப்பக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலுள்ள சபரிமலை போன்ற இடங்களில் பக்தர்கள் வந்து செல்ல நீதிமன்றம் ஒரு வழக்கில் அனுமதித்துள்ளது. சதுரகிரி மலைக்கோயிலுக்கு மக்கள் செல்லும் உரிமை 1979ல் அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அங்கு செல்வது, தங்குவதை வனத்துறை கட்டுப்படுத்த முடியாது. பொதுநலன் கருதி வனத்துறையுடன் கலந்தாலோசித்து, நியாயமான கட்டுப்பாடுகளுடன் புதிய வழிகாட்டுதல்களை அறநிலையத்துறை ஏற்படுத்த வேண்டும்.

இதில் தினமும் கடவுளை வழிபட பக்தர்களை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை வனத்துறை சோதனைச்சாவடி வழியாக அனுமதிக்க வேண்டும். தரிசனத்திற்கு பிறகு பக்தர்கள் மாலை 4 மணிக்குள் பாதுகாப்பாக கீழே இறங்க ஏதுவாக, காலை 10 மணிக்கு மேல் பக்தர்களை அனுமதிக்காமல் நுழைவாயிலை மூட வேண்டும். இரவில் யாரும் அனுமதியின்றி மலையில் தங்ககூடாது. இதை உறுதி செய்ய வேண்டும். நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் மக்கள் எத்தனை பேர் சென்று வருகிறார்கள் என்பதை கணக்கிட வேண்டும். யாரும் அனுமதியின்றி மலையில் தங்கினால், வனத்துறையினர் கைது நடவடிக்கை எடுக்கலாம்.

பக்தர்கள் அனுமதித்த மலைப்பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். அதிலிருந்து விலகி வனத்தில் வேறு எந்த இடத்திலும் நுழையக் கூடாது. பருவகால மாற்ற சூழ்நிலையின்போது பக்தர்களை மலையேற அனுமதிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாக உதவியை அறநிலையத்துறை பெற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் முடிவே இறுதியானது. மலைப்பகுதியில் குப்பை தடுக்கப்பட வேண்டும். பாலித்தீன், பிளாஸ்டிக், தீப்பெட்டிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை தடை செய்ய வேண்டும். வனத்துறை சோதனைச் சாவடியில் பக்தர்களை முழுமையாக சோதனைக்கு உட்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ வேண்டும். முக்கிய இடங்களில் பாலங்கள் அமைக்க திட்ட பரிந்துரையை வனத்துறைக்கு அறநிலையத்துறை அனுப்ப வேண்டும். வனப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க போதிய வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர்கள், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். அறநிலையத்துறையின் பட்டா நிலத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டார்.

  • அனைத்து மக்களின் நம்பிக்கை, வழிபாட்டு சுதந்திரத்தை அரசியலமைப்பு பாதுகாக்கிறது.
  •  சதுரகிரி மலைக்கோயிலுக்கு மக்கள் செல்லும் உரிமை 1979ல் அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.
  •  பக்தர்கள் அங்கு செல்வது, தங்குவதை வனத்துறை கட்டுப்படுத்த முடியாது. பொதுநலன் கருதி வனத்துறையுடன் கலந்தாலோசித்து, நியாயமான கட்டுப்பாடுகளுடன் புதிய வழிகாட்டுதல்களை அறநிலையத்துறை ஏற்படுத்த வேண்டும்.