Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மிக பிரம்மாண்டமாக `பெரியார் அறிவுலகம்’ அமைத்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் இன்று பாராட்டு விழா: கட்சி அலுவலக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்

கோவை: கோவையில் மிக பிரம்மாண்டமாக `பெரியார் அறிவுலகம்’ அமைத்ததற்காக மு.க.ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா நடக்கிறது. தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவையின் புதிய அடையாளமாக, காந்திபுரம் பஸ் நிலையம் அருகே ரூ.300 கோடியில் `பெரியார் அறிவுலகம்’ என்னும் பெயரில் மிக பிரம்மாண்ட நூலகம் அமைத்தார். இது, 7 தளங்களை கொண்டதாக வானுயர்ந்து நிற்கிறது.

திமுக ஆட்சி காலத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமான கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில், மீதமுள்ள பணிகள் கடந்த மாதம் நிறைவுபெற்றது. இதையடுத்து, முதல்வர் விஜய், கடந்த மாதம் 16ம் தேதி பெரியார் அறிவுலகத்தை திறந்துவைத்தார். தமிழகத்தில், பெரியாரின் புகழுக்கு மேலும் மகுடம் சேர்க்கும் வகையில், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பிரம்மாண்ட நூலகம் அமைத்து, அதற்கு பெரியார் பெயர் சூட்டிய காரணத்தால், அவருக்கு திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு விழா கோவையில் வஉசி மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதற்காக, பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில், பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு, பீளமேடு விமான நிலையத்தில் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன்பின்னர், மு.க.ஸ்டாலின் காரில் நீலாம்பூர் செல்கிறார். அங்கு, கோவை மாவட்ட ஒருங்கிணைந்த திமுக அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின், அருகில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் ஓய்வெடுக்கிறார். மாலை 5 மணிக்கு பாராட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு, இரவு 8 மணியளவில் விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார்.