பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரில் கழிவுநீர் குளமாக மாறிய குடிநீர் குளம்: தூர்வாரி சீரமைக்க வேண்டுகோள்
ஊத்துக்கோட்டை: கன்னிகைப்பேர் கிராமத்தில் கழிவு நீர் குளமாக மாறிய குடிநீர் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே, கன்னிகைப்பேர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் 2 ஏக்கர் பரப்பளவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தை சுமார் 60 வருடங்களுக்கு முன்பு இப்பகுதி மக்கள் குடிநீர் குளமாக பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இந்த குளம் புதர்கள் மண்டி செடி, கொடிகள் படர்ந்து தூர்ந்து விட்டது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த குளத்தில் கலப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமல்லாமல், சிலர் இறைச்சி கழிவுகள், குப்பைகளை இந்த குளத்தின் அருகில் கொட்டி செல்கின்றனர். இதனால், குளம் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கன்னிகைப்பேர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி மக்கள் பல முறை மனு கொடுத்தும், தூர்வார கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், தனிநபர்கள் சிலர் குளத்தை ஆக்கிரமித்துள்ளனர். எனவே, தூர்ந்து விட்ட குளத்தை தூர்வாரி சீரமைத்து அதை சுற்றிலும் கரையை பலப்படுத்தி படிகட்டுகள் கட்டி பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
