Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரியபாளையம் அருகே 8 மணி நேரம் மின் தடை: 3 கிராம மக்கள் சாலை மறியல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே 8 மணி நேர மின்தடை காரணமாக 3 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் அக்கரப்பாக்கம், திருநிலை, பனையஞ்சேரி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயிகள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள 3 கிராமங்களுக்கும் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு திடீரென மின்சாரம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு போனில் தொடர்பு கொண்டனர். ஆனால், யாரும் போனை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 3 கிராம மக்கள் நேற்று இரவு 10.30 மணி அளவில் கன்னிகைப்பேரில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால், மின்வாரிய அலுவலகம் பூட்டியிருந்தது. மேலும் ஆத்திரமடைந்த மக்கள், மின்வாரிய அலுவலகம் எதிரில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்ததும் பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர்.

அப்போது, மக்கள், உடனடியாக மின்சாரம் வந்தால்தான் கலைந்து செல்வோம் என கூறினர். இதை கேட்ட போலீசார், மின்வாரிய அதிகாரியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, இந்த பகுதிக்கு எப்போது மின்சாரம் வரும் என கேட்டனர். சிறிது நேரத்தில் மின்சாரம் வந்துவிடும் என அவர்கள் கூறியுள்ளனர். இதை போலீசார் 3 கிராம மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சிறிது நேரத்தில் இரவு 11 மணிக்கு மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. 8 மணி நேர மின்தடையால் கன்னிகைப்பேரில் பரபரப்பு ஏற்பட்டது.