பெரியபாளையம் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி பணியை விரைவில் முடிக்க வலியுறுத்தல்
தற்போது அம்பேத்கர் நகர் உள்பட சுற்றுவட்டார நகர் பகுதிகளில் மக்கள்தொகை அதிகரிப்பினால், இங்கு புதிதாக கூடுதல் கொள்ளளவிலான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித் தரவேண்டும் என்று பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகத்திடம் கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த வருடம் அம்பேத்கர் நகரில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் துவங்கின.
இதற்காக அங்கு சிமென்ட் கான்கிரீட்டிலான தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளன. அதன்பிறகு தொட்டி கட்டும் பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதனால் அப்பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு பதிலாக, புதிதாக கட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் தூண்கள் கடந்த சில மாதங்களாக கிராம மக்களிடையே பரிதாபமாக காட்சியளித்து வருகிறது. இதுகுறித்து ஊராட்சி, ஒன்றிய மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், முறையான பதிலளிக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர்.
எனவே, பெரியபாளையம் ஊராட்சியில் அதிகரித்து வரும் மக்கள்தொகையை கருத்தில் கொண்டு, இங்கு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகளை தரமான முறையில் முடித்து, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.