பெரம்பூர்: பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மரம் விழுந்து சிறுமி காயம் அடைந்தார். கார், ஆட்டோ ஆகியவையும் சேதம் அடைந்தது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று காலை 11 மணியளவில் பணிகள் நடைபெற்றபோது அங்குள்ள ஒரு அரச மரம் கீழே சாய்ந்து விழுந்துள்ளது. இதில் அவ்வழியாக சென்றுக்கொண்டிருந்த 15 வயது சிறுமி மீது மரம் விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
வலியால் துடித்த அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் மரம் விழுந்ததில் கார், ஆட்டோ ஆகியவை சேதம் அடைந்தன. இதுபற்றி அறிந்ததும் செம்பியம் தீயணைப்புத்துறை அலுவலர் பரமேஸ்வரன் தலைமையில் வீரர்கள் வந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு சாலையில் விழுந்துகிடந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றி போக்குவரத்து சீரமைத்தனர்.

